இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் ‘the wall’, ஜமி எனப் பல பட்ட பெயர்கள் இவருக்கு உண்டு. அந்நிய மண்ணில் இந்திய பேட்டிங்கை தூக்கி நிறுத்தும் முக்கியமானவர் ராகுல் டிராவிட். இதன்காரணமாகவே இவரை அனைவரும் தூண் என்று அழைப்பார்கள். 


அப்படிப்பட்ட டிராவிட்டின் சிறப்பான டாப் 5 வெளிநாடு டெஸ்ட் இன்னிங்ஸ்கள் என்னென்ன?


148 vs தென்னாப்பிரிக்கா(1997):


1997-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் முறையாக தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் செய்தார். அப்போது 3ஆவது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் இந்திய 100/3 என தவித்து கொண்டிருந்த போது டிராவிட் மற்றும் கங்குலி ஜோடி சேர்ந்து இந்திய அணி சரிவில் இருந்து மீட்டது. அத்துடன் ராகுல் டிராவிட் 148 ரன்கள் விளாசி அசத்தினார். 


 



190 vs நியூசிலாந்து(1998-99):


1998ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்தது. அந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹமில்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் போது சிறப்பாக விளையாடிய ராகுல் டிராவிட் 31 பவுண்டரிகளுடன் 190 ரன்கள் எடுத்தார். அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸிலும் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணி போட்டியை டிரா செய்ய முக்கிய காரணமாக அமைந்தார். 


 



233 vs ஆஸ்திரேலியா(2003):


2003ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது அந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 556 ரன்கள் விளாசியது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த போதும் ராகுல் டிராவிட் லக்‌ஷ்மண் ஜோடி அணியை மீட்டது. ராகுல் டிராவிட் இரட்டை சதம் விளாசி 233 ரன்கள் எடுத்தார். 


 



146 vs வெஸ்ட் இண்டீஸ்(2006):


2006ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது தொடரின் 2 ஆவது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம் பார்த்தனர். ராகுல் டிராவிட் 146 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 


 



146* vs இங்கிலாந்து(2011):


2011ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தன்னுடைய கடைசி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது ஓவலில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 591 ரன்கள் விளாசியது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 300 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் ராகுல் டிராவிட் மட்டும் 146* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சாதனையையும் டிராவிட் படைத்தார். 


 



இந்திய அணிக்காக இதுபோன்று ராகுல் டிராவிட் பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். அவற்றை அடுக்கினால் இன்று ஒருநாள் கூட பத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: என்றும் வலிமை... எப்போதும் பீஸ்ட்... இது இந்தியாவின் தூண்... கிரிக்கெட் உலகின் ‛டான்’ டிராவிட்!