ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள வாண்டரரஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், பண்ட் அவுட்டான விதம் விமர்சனத்துக்கு உள்ளாகியது.
ரபாடா வீசிய பந்தை எதிர்கொண்ட பண்ட், ஷார்ட் லெந்தில் பிட்ச்சாகி வருகிறது என தெரிந்தும் அடிக்க முற்பட்டார். இதனால், எட்ஜ்ஜாகி கேட்ச் கொடுக்க நேரிட்டது. வந்த வேகத்தில் டக்-அவுட்டாகி வெளியேறினார் பண்ட். இதை பார்த்த கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் பண்ட் அவுட்டான விதத்தை சாடினர். அந்த வரிசையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் மதன் லால் கருத்து தெரிவித்திருக்கிறார்.
”ரிஷப் பண்ட்டுக்கு இடைவெளி தேவை. சாஹா மாதிரியான அனுபவ விக்கெட் கீப்பர், பேட்டர் இருக்கும்போது பண்ட்டுக்கு நிச்சயம் இடைவெளி அளிக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை பண்ட் முடிவு செய்ய வேண்டும். ஒரு வேளை குழப்பமான மனநிலையில் அவர் இருந்தால், அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அவர் இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். ஆனால், அதற்காக இப்படி ஒரு ஷாட் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அணிக்காக விளையாட வேண்டும், தனக்காக இல்லை” என காட்டமாக பேசி இருக்கிறார் மதன் லால்.
மதன் லால் மட்டுமின்றி, சுனில் கவாஸ்கர் போன்ற அனுபவ கிரிக்கெட் வீரர்கள் பண்ட் தேர்வு செய்த தவறான ஷாட்டுக்கு விமர்சனம் எழுப்பினர். எனினும், தலைமை பயிற்சியாளர் டிராவிட் கருத்து தெரிவிக்கும்போது, “ரிஷப் பண்ட் பாசிட்டீவாக விளையாட கூடியவர். அவருடன் கலந்து ஆலோசித்து இது போன்ற சொதப்பலான ஷாட்களை எப்படி தவிர்ப்பது என திட்டமிட வேண்டும்” என்றார்
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் சமனாகி உள்ளது. அடுத்து கேப் டவுனில் நடக்க இருக்க டெஸ்ட் போட்டிதான் தொடரை வெல்லப்போகும் அணியை தீர்மாணிக்க உள்ளது. இந்த போட்டி ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். இது குறித்து பேசிய கே.எல் ராகுல், “விராட் உடல்நலம் தேறி வருகிறார். கடந்த இரு தினங்களாக அவர் வலைப்பயிற்சிக்கு அவ்வப்போது வந்து சென்றார். அவர் விரைவில் குணமடைவார்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்