டி20 உலகக்கோப்பைத் தொடரை இந்திய அணி வென்ற பிறகு புதிய பரிமாணத்தை எடுத்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித்சர்மா மற்றும் ஜடேஜா ஓய்வு பெற்ற பிறகு, புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.


கம்பீர் அறிவில்லாதவர் இல்லை:


இந்த நிலையில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். “ கம்பீருக்கு ஐ.பி.எல். மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அவர் புதிய சிந்தனைகளுடன் சரியான வயதில் வந்துள்ளார் என்றே நான் கருதுகிறேன். அவருக்கு பெரும்பாலான வீரர்கள் பற்றி தெரியும். குறிப்பாக, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருக்கு வீரர்களைப் பற்றி நன்றாகவே தெரியும். ஐ.பி.எல். தொடரில் பல அணிகளில் இருந்ததும் அவருக்கு உதவிகரமாக இருக்கும். அதனால்தான் அவர் புத்துணர்ச்சியுடன் இருப்பார் என்று கருதுகிறேன். நமக்கு கம்பீர் பற்றி தெரியும். அவர் ஒன்றும் அறிவில்லாதவர் இல்லை. அவரது சிந்தனைகள் சிறப்பாகவே இருக்கும். 


அனுபவமிக்க அணி:


மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால் அவருக்கு நல்ல அனுபவமிக்க அணி கிடைத்துள்ளது. அவருக்கு நன்றாக அணி அமைந்துள்ளது. முதிர்ச்சியான அனுபவமிக்க அணி. அவர் எப்படி செயல்படப் போகிறார் என்று பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன். அவரிடம் வேலை தொடர்பான நல்ல சிந்தனைகள் மற்றும் சிறந்த அனுபவம் உள்ளது. அவர்களின் பலம் என்ன? அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள்? எந்த மாதிரியான சுபாவம் கொண்டவர்கள்?  அவர்களின் ஆளுமைகள் என்ன? என்பதை புரிந்து கொள்வது ஒரு கேள்வியாக இருக்கும்.”


இவ்வாறு அவர் கூறினார்.


இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே பதவி வகித்தபோது, அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர், கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய அணி கடினமான சூழலில் இருந்தபோது பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்ட ரவிசாஸ்திரி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை நன்றாகவே கட்டமைத்தார்.


அவரது தலைமையில் ஐ.சி.சி. கோப்பை எதையும் வெல்லாவிட்டாலும் இருநாடுகள் சீரியஸ், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடர் என இந்திய அணி தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


உலகக்கோப்பை நாயகன்:


இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் இந்திய அணிக்காக பல நெருக்கடியான போட்டிகளில் ஆடி வெற்றி பெற்றுத்தந்துள்ளார். 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும், அந்த தொடர்களிலும் சிறப்பாக ஆடி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை கேப்டனாக வென்று தந்ததுடன், நடப்பு ஐ.பி.எல். கோப்பையையும் ஆலோசகராக இருந்து வென்று கொடுத்தார்.