டி20 உலகக் கோப்பை 2024:


ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 22) நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 20 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது இந்திய அணி. அந்தவகையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் எளிமையாக அரையிறுதி வாய்ப்பை பெறும்.


அதன் பின் ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்தால் கூட ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணியால் அரையிறுதி சுற்றில் விளையாட முடியும். ஏற்கனவே ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி தோல்வியே அடையாமல் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இது போல் இந்த முறை நடைபெறாமல் இருப்பதற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில ஆலோசனைகளை இந்திய அணிக்கு வழங்கியுள்ளார்.


ரவி சாஸ்திரி அட்வைஸ்:


இது தொடர்பாகா அவர் பேசுகையில், “இந்திய அணியை பொறுத்தவரை போட்டியில்  மட்டும் தான் கவனத்தை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பற்றி இப்போது சிந்திக்கத் தேவையில்லை. மற்றொரு போட்டியாக எண்ணி விளையாடும் போது வெற்றி எளிதாக கிடைக்கும். இந்திய வீரர்களின் ஆட்டம் தற்போது அப்படிதான் இருக்கிறது. இதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்திய அணியின் முக்கியமான வீரர் ஜஸ்பிரித் பும்ரா தான்.


அவருக்கு பிட்ச் எப்படி இருக்கிறது என்பதே தேவையில்லை. எந்த பிட்சிலும் சூழலுக்கு ஏற்ப பவுலிங் செய்து விக்கெட்டை வீழ்த்த கூடியவர். அவரிடம் அவ்வளவு வெரைட்டியான பந்துகள் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நீண்ட நாட்களுக்கு பின் புதிய பந்தில் பவுலிங் செய்தார். சிராஜ் இல்லாத போது, குர்பாஸின் விக்கெட்டை 2வது பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அவரால் எந்த பிட்சிலும், சூழலிலும் வேகமாக மாறிக் கொள்ள முடிகிறது.


அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரில் பேட்ஸ்மேன் ஆக்ரோஷமாக விளையாடுவதை கண்ட பின், உடனடியாக வேகத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று புத்திசாலித்தனமாக சிந்திக்கிறார். இந்திய அணி அச்சமின்றி விளையாட வேண்டும்” என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.