ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிரட்டியவர் ரிக்கி பாண்டிங். இவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த போது அந்த அணியில் பந்து வீச்சாளர்களாக ஜொலித்த வீரர்கள் கிளென் மெக்ராத், பிரெட் லீ,கில்லஸ்பி போன்றவர்கள் எல்லாம் களத்திற்கு வந்தாலே சாதரணமாகவே இந்திய ரசிகர்களுக்கு ஒரு பயம் ஏற்படும். இப்படி அசத்தலான பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் தற்போதைய ஜஸ்ப்ரித் பும்ரா தான் அனைத்து வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.


மிகச்சிறந்த பவுலராக விளங்கி வருபவர் பும்ரா:


இது தொடர்பாக அவர் பேசுகையில், "கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் 3 வடிவங்களிலும் மிகச்சிறந்த பவுலராக விளங்கி வருபவர் பும்ரா மட்டும் தான். 2 ஆண்டுகளுக்கு முன் பும்ராவுக்கு காயம் ஏற்பட்ட போது, பலரும் அவரால் கம்பேக் கொடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். ஆனால் முன்பை விடவும் இன்னும் சிறப்பாக பும்ரா வந்துள்ளார்.


எந்தவொரு பவுலரையும் அறிய வேண்டுமென்றால், எதிரணி பேட்ஸ்மேன்களிடம் தான் அவரை பற்றி விசாரிக்க வேண்டும். அவர் கைகளில் பந்து இருக்கும் போது என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. ஸ்விங், வேகம், இன்-ஸ்விங்கர், அவுட்-ஸ்விங்கர் என்று அத்தனை செய்ய முடியும். டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவின் பவுலிங்கை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். அவரின் வேகத்தில் எந்த குறைபாடும் இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அவரின் பவுலிங்கில் துல்லியம் அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது பவுலிங்கில் முன்னேற்றம் அடைந்து கொண்டே செல்கிறார். திறமையும், கன்சிஸ்டன்சியும் இருக்கும் போது நிச்சயம் மிகச்சிறந்த வீரராக வர முடியும். கிளென் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் கன்சிஸ்டன்சி காரணமாக தான் நீண்ட காலம் விளையாட முடிந்தது. அதுதான் மற்றவர்களுக்கும் இவருக்கும் உள்ள வித்தியாசம்"என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.