U19 WT20 WC: மதுரைப் பொண்ணு கமாலினி டூ ஆஸ்திரேலியா மேகி வரை! உலகக்கோப்பையில் கலக்கப்போறது இவங்கதான்!
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடங்கியுள்ள நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 5 வீராங்கனைகள் குறித்து கீழே காணலாம்.

ஆடவர் கிரிக்கெட்டிற்கு இணையாக மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் தற்போது உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மலேசியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை t20 கிரிக்கெட் இன்று தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து என அனைத்து அணிகளும் களமிறங்கியுள்ளன.
அந்தந்த நாட்டு கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரங்கள் இந்த தொடரில் இருந்து அவர்களின் சீனியர் அணிக்குச் செல்ல உள்ளனர். இதனால், ஒவ்வொரு வீராங்கனையும் அவர்களது முழு திறனை வெளிக்காட்ட உள்ளனர். இந்த நிலையில், இந்த தொடரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 5 வீராங்கனைகள் குறித்து காணலாம்.
ஜி கமாலினி: ( இந்தியா)
மதுரையைப் பூர்வீகமாக கொண்டவர் ஜி. கமாலினி. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இவர் 2008ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி பிறந்தவர். இடது கை பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்யும் திறமை கொண்ட இவர் அதிரடியாக ரன்கள் குவிக்கும் வீராங்கனை ஆவார். அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவர் 44 ரன்களை குவித்துள்ளார். தமி்ழ்நாடு அணிக்காக ஆடி வரும் இவர் மகளிர் பிரீமியர் லீக்கில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்த தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேகி கிளார்க் - ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலிய அணியின் வளரும் வேகப்பந்து வீச்சாளர் மேகி கிளார்க். வேகப்பந்து வீச்சாளரான இவருக்கு 17 வயதுதான் ஆகிறது. இவர் ஆஸ்திரேலிய சீனியர் அணிக்காக 2023ம் ஆண்டே அறிமுகமாகிவிட்டார். கடந்த முறை நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பையில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக மேகி கிளார்க் உள்ளார்.
பூஜா மகோதா ( நேபாளம்):
நேபாள கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணியாக உள்ளது. அந்த அணியின் கேப்டனாக இந்த தொடரில் களமிறங்கியிருப்பவர் பூஜா மகோதா. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஜொலிக்கும் ஆல் ரவுண்டராக பூஜா மகோதா உள்ளார். தகுதிச்சுற்றுப் போட்டியில் குவைத் அணிக்கு எதிராக 69 பந்துகளில் 130 ரன்களை விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் நேபாள அணிக்காக சதம் விளாசிய 2வது வீராங்கனை இவர் ஆவார்.
ஜெமிமா ஸ்பென்ஸ் (இங்கிலாந்து)
இந்த தொடரில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீராங்கனை ஜெமிமா ஸ்பென்ஸ். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் வல்லமை பெற்றவர். கடந்த தொடரில் ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வந்த இவர் இன்று நடந்த போட்டியில் 27 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 37 ரன்கள் எடுத்து அசத்தினார். மிடில் ஆர்டரில் இந்த தொடரில் இவரது பங்களிப்பு அவசியம் ஆகும்.
ரிது சிங்: ( அமெரிக்கா)
சர்வதேச கிரிக்கெட்டில் கால்தடம் பதித்துள்ள அமெரிக்கா மற்ற அணிகளுக்கு சவால் தரும் விதமாக ஆடி வருகிறது. இந்த தொடரில் ஆடும் அமெரிக்க அணியின் ரிது சிங் 18 வயதே ஆனவர். அமெரிக்க அணிக்காக 6வது வீராங்கனையாக களமிறங்கி அசத்தலாக பேட்டிங் செய்பவர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தும் திறன் கொண்டவர். அமெரிக்க அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 விக்கெட்டுகளையும், 15 டி20 போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இந்தத் தொடரில் இவர்களது ஆட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.