147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், எந்த அணியும் பாகிஸ்தானின் அளவு தோல்வியை சந்திக்கவில்லை. அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் இன்னிங்ஸில் 500+ ரன்களை அடித்து, இறுதியில் இன்னிங்ஸ் தோல்வியை பெற்ற ஒரே அணி என்ற மோசமான சாதனையை பாகிஸ்தான் அணி செய்திருக்கிறது.
பாகிஸ்தான் அணி தோல்வி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி,மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கியது, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்படி, பாகிஸ்தான் அணி வீரர்கள் அப்துல்லா ஷபிக் , ஷான் மசூத் மற்றும் ஷல்மான் அலி ஆஹா ஆகியோர் சதம் விளாசி அந்த அணிக்கு ரன்களை குவித்து கொடுத்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்து அணியில், ஓபனர் கேப்டன் ஒல்லி போப் டக்அவுட் ஆனார்.அடுத்து, ஜாக் கிரௌலி 78 ரன்களும், பென் டக்கட் 84 ரன்களும்அடித்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஜோ ரூட் 262 ரன்களும், ஹாரி புரூக் 317 ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 823 ரன்களை குவித்து டிக்ளெர் செய்தது.
147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை:
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், சபிக், சைம் அயுப், கேப்டன் ஷான் மசூத் , பாபர் அசாம், ரிஸ்வின் போன்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். டாப் ஆர்டர் பேட்டர்கள் படுமோசமாக சொதப்பியதால், பாகிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸில் 220/10 ரன்களை மட்டும் சேர்த்து, இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
முதல் இன்னிங்ஸில் 556 ரன்களையும், அடுத்து 220 என மொத்தம் 776 ரன்களை எடுத்து, பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி மூலம் பாகிஸ்தான் அணி ஒரு மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது.
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், எந்த அணியும் பாகிஸ்தானின் அளவு தோல்வியை சந்திக்கவில்லை. அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் இன்னிங்ஸில் 500+ ரன்களை அடித்து, இறுதியில் இன்னிங்ஸ் தோல்வியை பெற்ற ஒரே அணி என்ற மோசமான சாதனையை பாகிஸ்தான் அணி செய்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.