விஜய் ஹசாரே கோப்பை நிறைவடைந்ததை தொடர்ந்து, முதல்தர போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியின் மூலம், தமிழகத்தை சேர்ந்த 21 வயதான சாய் சுதர்சன், ரஞ்சி போட்டிகளில் அறிமுகமானார். இதையடுத்து, களமிறங்கிய ஐதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின், மிகில் ஜெய்ஸ்வால் 137 ரன்களையும், தன்மய் அகர்வால் 135 ரன்களையும் சேர்த்தனர். தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக, சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளையும், எல்.விக்னேஷ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சாய் சுதர்சன் அபாரம்:
முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணியில், சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி, ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலபுறமும் சிதறடித்தது. முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 204 ரன்கள் சேர்த்து, தமிழக அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. 97 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட, 116 ரன்கள் எடுத்தபோது ஜெகதீசன் அவுட்டானார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் அறிமுகப் போட்டியிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து, 273 பந்துகளில் 18 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட 179 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானர். அதையடுத்து களமிறங்கிய பாபா அபரஜித்தும் சதமடிக்க, தமிழக 4 விக்கெட் இழப்பிற்கு 510 ரன்கள் எடுத்திருந்த போது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
சாய் சுதர்சன் சாதனை:
அறிமுகப்போட்டியிலேயே 179 ரன்கள் எடுத்தை தொடர்ந்து, ரஞ்சி தொடரில் அறிமுகப்போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்த தமிழக வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 3 சதங்கள் உட்பட 600 ரன்களுக்கும் அதிகமாக குவித்தார். சக தொடக்க வீரரான ஜெகதீசனும், விஜய் ஹசாரே கோப்பையில் தொடர்ந்து 5 சதங்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. 21 வயதான சாய் சுதர்சன், கடந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.