இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த ஆட்டத்தின் 45 ஆவது ஓவரில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் தூக்கி அடித்த பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே துள்ளி குதித்து சிக்ஸருக்கு போகாமல் ஆஸ்திரேலிய வீரர் அகர் தடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 


இதையடுத்து, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் விளாசியது. இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் சதம் விளாசினார். அவர் 128 பந்துகளில் 134 ரன்கள் (12 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்தார். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


வைடு, நோ பால் உள்பட 13 எக்ஸ்ட்ரா பந்துகளை ஆஸ்திரேலிய அணி வீசியது. இவ்வாறாக 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் கம்மின்ஸ் 10 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேபோல் ஆடம் சம்பாவும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் 10 ஓவர்கள் வீசி 55 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஸ்டாய்னிஸ், ஸ்டார்க் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.


ஆஸி., வீரரின் அசத்தலான ஃபீல்டிங்
ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரான ஆஷ்டன் சார்லஸ் அகர் 45 ஆவது ஓவரின் கடைசி பந்தை டேவிட் மலான் தூக்கி அடித்தார். அந்த பால் சிக்ஸர் சென்றுவிட்டது என்றே அனைவரும் கருதினர். ஆனால், பவுண்டரி லைனுக்கு அப்பால் குதித்து கைகளால் அட்டகாசமாக பந்தை தடுத்து ஆடுகளத்துக்கு திருப்பி அனுப்பினார் அகர்.


இதனால், 5 ரன்களை அவர் அணிக்காக காப்பாற்றிக் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் அவரது அற்புதமான ஃபீல்டிங்கை சிலாகித்து வருகின்றனர்.
அந்த ஓவரை கம்மின்ஸ் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


134 ரன்களை விளாசிய மலான், ஜம்பா வீசிய 46ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை மீண்டும் தூக்கி அடித்தார். அது ஆஸ்டன் அகரிடமே கேட்ச் ஆனது குறிப்பிடத்தக்கது.






288 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. அந்த அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது.




ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 86 ரன்களும், டிராவிஸ் ஹெட் 69 ரன்களும் விளாசினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி வீரர் ஸ்டீவன் ஸ்மித் 80 ரன்கள் விளாசினர். அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.


ICC Rules: நேபாள அணிக்கு ஆதரவாக 5 பெனால்டி ரன்கள்... ஐசிசி விதிகளை மீறிய முதல் அணி இதுதான்!


இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டான், லியாம் டாசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.