முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ஜோ ரூட் மகத்தான சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்திருக்கிறார்.


ஜோ ரூட் சாதனை:


முல்தான் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷபிக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சதம் விளாச பாகிஸ்தான அணி 556 ரன்கள் குவித்தது.இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் கிராலி 78 ரன்களும், ஆலிவ் போப் டக் அவுட்டாகியும் வெளியேறினார். இந் நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறார்.




டெஸ்டில் 35 வது சதம்:


இச்சூழலில், ஜோ ரூட் 167 பந்துகளில் சதம் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 35 வது சதத்தை விளாசி இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்,வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான், இலங்கை வீரர் ஜெயவர்த்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.






அதுமட்டுமில்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அலெஸ்டர் குக்கை ஜோ ரூட் பின்னுக்கு தள்ளியிருக்கிறார். குக் சர்வதேச டெஸ்ட் 12,472 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஜோ ரூட் தற்போது 12,500 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையில், பெரும்பாலான காலண்டர் ஆண்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்களை எடுத்த சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் முறியடித்து உள்ளார்.