ENG vs AUS: அடுத்தடுத்து அவுட்! இங்கிலாந்து அட்டாக் பவுலிங்! ஆஸ்திரேலியாவை காப்பாற்றுவது யார்?
352 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணிக்காக அதிரடி காட்டிய ஷார்ட் 63 ரன்களில் அவுட்டானார்.

பாகிஸ்தான் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி லாகூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்காக பென் டக்கெட் அபாரமாக ஆடி 165 ரன்கள் விளாசினார். ஜோ ரூட்டும் 68 ரன்கள் அடிக்க இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு 352 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
டிராவிஸ் ஹெட், ஸ்மித் ஏமாற்றம்:
இதையடுத்து, இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணிக்காக மேத்யூ ஷார்ட் - டிராவிஸ் ஹெட் ஆட்டத்தை தொடங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட் 6 ரன்னில் அவுட்டானார். ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். அவர் 5 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்தில் கேப்டன் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர், மேத்யூ ஷார்ட் - லபுஷேனே ஜோடி சேர்ந்தது. இலக்கு பெரியது என்பதால் மேத்யூ ஷார்ட் விக்கெட்டுகள் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் அடித்து ஆடினார். அவருககு மறுமுனையில் லபுஷேனே நன்கு ஒத்துழைப்பு அளிக்க ஷார்ட் அடித்து ஆடினார். இதனால், ஆஸ்திரேலியாவின் ரன் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்தது. பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய ஷார்ட் அரைசதம் விளாசினார்.
சுழல் தாக்குதல்:
ஷார்ட் அரைசதம் விளாசிய சிறிது நேரத்தில் லபுஷேனே பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 45 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து அடில் ரஷீத் பந்தில் அவுட்டானார். ப்ரைடன் கார்ஸ் ஓவரில் ஷார்ட் - லபுஷேனே ஜோடி அடித்து ஆடியதைத் தொடர்ந்து பட்லர் சுழற்பந்துவீச்சாளர்களை அழைத்தார்.
அவரது முயற்சிக்கு உடனடியாக பலன் கிட்டியது. ரஷீத் சுழலில் லபுஷேனே அவுட்டானதைத் தொடர்ந்து, லிவிங்ஸ்டன் வீசிய முதல் ஓவரிலே இங்கிலாந்து அணியை அச்சுறுத்திய மேத்யூ ஷார்ட் அவுட்டானார். அவர் 66 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
வெற்றிக்கு போராட்டம்:
136 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணிக்காக தற்போது ஜோஷ் இங்கிலிஷ் - அலெக்ஸ் கேரி ஆடி வருகின்றனர். வெளியில் மேக்ஸ்வெல் முக்கிய பேட்ஸ்மேனாக உள்ளார். இவர் தவிர துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், ஆடம் ஜம்பா, ஜான்சன் உள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி வெற்றி பெற முழு வீச்சில் முனைப்பு காட்டும். மைதானத்தில் சுழற்பந்து நன்றாக எடுபடுவதால் இங்கிலாந்து அணி சுழற்பந்துவீச்சுக் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த அணியில் ரஷீத், லிவிங்ஸ்டன் மட்டுமின்றி ஜோ ரூட்டும் நல்ல சுழற்பந்துவீச்சாளர் என்பதால் ஆஸ்திரேலிய அணியின் பின்வரிசை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? என்று கேள்வி எழுந்துள்ளது.