சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 


அசத்திய டக்கெட் - ஜோ ரூட் ஜோடி:


பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பில் சால்ட் 10 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 15 ரன்னிலும் அவுட்டானார்கள். அதன்பின்பு, ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் பென் டக்கெட் - ஜோ ரூட் ஜோடி ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் கொண்டு சென்றனர். குறிப்பாக, டக் சற்று அதிரடி காட்ட அவருக்கு ஜோ ரூட் நல்ல ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடியால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. 


டக்கெட் சதம்:


இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்த நிலையில், ஜோ ரூட் 78 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 68 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடக்க முதல் சிறப்பாக ஆடி வந்த பென் டக்கெட் மறுமுனையில் சதம் விளாசினார். அவருக்கு இது 3வது சதம் ஆகும். 


மறுமுனையில் ஹாரி ப்ரூக் 3 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டனுடன் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் இன்னும் துரிதமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர். இதனால், அவர் 150 ரன்களை எட்டினார். இந்த போட்டிக்கு முன்பு ஒருநாள் போட்டியில் அவரது சிறந்த ரன்னாக 118 ரன்கள் இருந்தது. அந்த ரன்னை இன்றைய போட்டியில் அவர் முறியடித்தார்.


165 ரன்கள் விளாசிய டக்கெட்:


45 ஓவர்களிலே இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் தடுமாறியது. போதிய அனுபவம் இல்லாத ஸ்பென்சர் ஜான்சன், துவார்ஷியஸ் ஆகியோர் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் வெளுத்தனர். அனுபவ வீரர் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அவரது ஓவரிலும் ரன்களை சிரமமின்றி எடுத்தனர். 


ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்த பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்து லபுஷேனே பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 143 பந்துகளில் 17 பவுண்டரி 3 சிக்ஸருடன் 165 ரன்கள் எடுத்தார். 


351 ரன்கள்:


இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 351 ரன்களை எடுத்தது. கடைசியில் ஆர்ச்சர் 10 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்தார்.  ஆஸ்திரேலிய அணிக்காக பென் துவார்ஷியஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜம்பா, லபுஷேனே தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணியில் ஜான்சன், மேக்ஸ்வெல், லபுஷேனே ஓவர்களில் ரன்கள் விளாசப்பட்டது.


இந்த போட்டியில் தோல்வியடையும் அணி அடுத்த 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும். இதனால், இந்த இமாலய இலக்கை எட்டிப்பிடிக்க ஆஸ்திரேலியாவும் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அணியில் டிராவிஸ் ஹெட், ஸ்மித், ஷார்ட், லபுஷேனே, மேக்ஸ்வெல், இங்கிலீஷ் ஆகியோர் உள்ளனர்.