இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி வீடியோ வைரலான நிலையில், அங்கு என்ன நடந்தது என்பதை தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா  இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 


தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் தட்டு தடுமாறி 262 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஒரு ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸில்  113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.  






இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற   115 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை  26.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. புஜாரா 31 ரன்களுடனும், பரத் 23 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  மேலும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 


இதனிடையே இந்த போட்டியின் போது  தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இந்திய அணி வீரர் விராட் கோலி தீவிர உரையாடலில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஊழியர் ஒருவர் உணவு ஒன்றை கொண்டு வந்து கொடுக்க முன் வந்தார். அதனை உள்ளே கொண்டு போய் வைக்க சொன்ன  விராட் கோலி, மீண்டும் டிராவிட்டுடன் பேசிக் கொண்டிருந்தார். 


பலரும் அது என்ன உணவு என கேள்வியெழுப்பினர். வர்ணனையாளர்கள் கூட 'சோலே பத்தூர்' (மைதாவிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, சன்னா மசாலா கலவை) என தெரிவித்தனர். இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய ராகுல் டிராவிட்டிடம், விராட் கோலிக்கு வந்தது என்ன உணவு என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அது சோலே பத்தூர் உணவா, அல்லது பஞ்சாபி உணவான சோலே குல்சாவா எனவும் கேட்கப்பட்டது. 


அதற்கு டிராவிட், அது குல்சா சோலே தான். அதனை விராட் கோலி எனக்கு ஆசையாக வைத்திருந்தார். ஆனால் நான் எனக்கு 50 வயதாகிறது. இவ்வளவு கொலஸ்ட்ராலை என்னால் தாங்க முடியாது என சொல்லவும் விராட் கோலி சிரித்தார் என கூறியுள்ளார்.