பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பர்வேஸ் முஷாரஃப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


கடந்த 1943ஆம் ஆண்டு, சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்திருந்தாலும் தேச பிரிவினையின்போது முஷாரஃப் குடும்பம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம் பெயர்ந்தது. 1964ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரஃப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார். 


இதை தொடர்ந்து, 1999ஆம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை கலைத்து அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கடந்த 2008 வரை பொறுப்பு வகித்தவர் முஷாரஃப்.


பாகிஸ்தான் அதிபராக முஷாரஃப் பதவி வகித்தபோது, அதாவது 2006ஆம் ஆண்டுதான், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு கடைசியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது, தோனியின் ஹேர்ஸ்டைலை முஷாரஃப் பாராட்டி பேசிய சம்பவமும் நடந்தது.


லாகூரில் நடந்த ஒரு நாள் போட்டிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், தோனி குறித்து முஷாரப் பாராட்டி பேசினார். போட்டியை வென்ற இந்தியா அணிக்கு வாழ்த்து தெரிவித்த முஷாரப், இந்தியா சிறப்பாக விளையாடியதாக கூறினார். 


அப்போது, தோனி குறித்து பேசிய அவர், "வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்த தோனியை நான் வாழ்த்துகிறேன். நான் தோனியிடம் ஒன்று சொல்ல வேண்டும். தோனி, ஹேர் கட் பண்ணுங்க என்று ஒரு பிளக்ஸ் கார்டைப் பார்த்தேன். நீங்கள் என் கருத்தை எடுக்க விரும்பினால் நீங்கள், இந்த ஹேர்கட்டில் அழகாக இருக்கிறீர்கள். முடி வெட்ட வேண்டாம் என்றுதான் சொல்வேன்" என்றார்.


குறிப்பிட்ட அந்த போட்டியில் 46 பந்துகளில் 72 ரன்களை அடித்து தூள் கிளப்பியிருப்பார் தோனி. போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் தோனிக்குதான் வழங்கப்பட்டது.


இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது. அதில், ஒன்றுதான், தோனியை முஷாரப் பாராட்டி பேசியது. 


இன்று, முஷாரப் காலமான நிலையில், தோனி குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முஷாரப் கடந்த ஆண்டு ஜூன் 10ம் தேதி அமிலாய்டோசிஸ் என்ற பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


 






இந்த பாதிப்பு படிப்படியாக அதிகரித்து உடலிலுள்ள உறுப்புகள் செயலிழக்க தொடங்கியது. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தநிலையில் முஷாரப் இன்று காலமானார்.