இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையின் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Continues below advertisement

படிக்கல் அசத்தல்:

சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டதால் இந்த போட்டியில் ஆடும் வாய்ப்பை தேவ்தத் படிக்கல் பெற்றார். இலங்கையில் கடந்த வாரம் நடந்த பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடிய படிக்கல் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை வீரர்களின் அனுபவமற்ற பந்துவீச்சு, மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தது படிக்கல்லுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. மறுமுனையில் கே.எல்.ராகுல் நிதானமாக ஆட படிக்கல் சிரமமின்றி ஆடினார். சிறப்பாக ஆடி 81 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

Continues below advertisement

அபார சதம்:

மறுமுனையில் அரைசதம் கடந்து ஆடிய கே.எல்.ராகுல் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். பின்னர், வந்த கேப்டன் சுப்மன்கில்லுடன் இணைந்து சிறப்பாக ஆடிய படிக்கல் தனது முதல் டெஸ்ட் சதத்தை விளாசினார். 

இந்தியாவின் சுதந்திர தினத்தில் விளாசப்பட்ட இந்த சதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், இந்திய அணிக்கு இது 600வது டெஸ்ட் போட்டியாகும். படிக்கல் தான் விளையாடிய 3வது டெஸ்ட் போட்டியிலே சதம் விளாசி அசத்தியுள்ளார். 

4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சதம்:

கடைசியாக ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் 2022ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஆடிய படிக்கல் தற்போது 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். 

விராட் கோலி, ரஹானே, புஜாரா என ஜாம்பவான் வீரர்கள் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் மிடில் ஆர்டர் நிலைதடுமாறி வருகிறது. இந்த சூழலில், படிக்கல் தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி ஆடி அசத்தல் சதம் விளாசியிருப்பது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக ஒளிர்வதையே காட்டியுள்ளது.

இந்தியாவின் ஸ்டார் ப்ளேயர் ஆவாரா?

மழை காரணமாக 2வது நாள் ஆட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், படிக்கல் 178 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் 131 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவரது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக அவர் உருவெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தனது முதல் டெஸ்ட் சதத்தை  பதிவு செய்துள்ள படிக்கல்லுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.