மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதினர். இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 


இந்த நிலையில், இந்த இரு அணிகளுக்கிடையேயான போட்டியின்போது ரசிகர் ஒருவர் வைத்திருந்த புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. ஹிந்தியில் எழுதப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலான அந்த புகைப்படத்தில், ”அன்புள்ள கேமராமேன், ஆண்கள் ஐபிஎல் தொடரில் எப்படி போட்டி நடக்கும்போது பெண்களை காட்டுகிறீர்களோ..! அதுபோல், மகளிர் ஐபிஎல் தொடரில் எங்களை போன்ற ஆண்களையும் காட்டவேண்டும்” என்று எழுப்பட்டு இருந்தது. 






இந்த புகைப்படத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அவருடைய பொறுமைக்கு பதில் விரைவில் கிடைக்கும்.. ஆனால், இந்த புகைப்படம் வேடிக்கையாக உள்ளது” என்று தெரிவித்திருந்தது.இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் விரும்பி வருகின்றனர். தற்போது டெல்லி கேபிடல்ஸின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  இந்த ட்வீட் இதுவரை சுமார் 2 ஆயிரத்திற்கு அதிகமானோட் லைக்குகளை செய்து,அதிகளவில் ரீட்வீட்டும் செய்து வருகின்றனர். 






பெங்களூரை வீழ்த்திய டெல்லி: 


முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில்  டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் கேப்டன் மேக் லேனிங் களமிறங்கினர்.இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர். 


14 ஃபோர்களை ஓடவிட்ட கேப்டன் லேனிங், 72 ரன்கள் எடுத்து வெளியேற, மறுமுனையில் பட்டையை கிளப்பிய ஷெபாலி வர்மா, 4 சிக்சர்களும் 10 ஃபோர்களும் அடித்து பெங்களூரு அணியை திணறடித்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷெபாலி 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.


தொடர்ந்து களத்தில் இறங்கிய மரிசான் கேப், 39 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 22 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு டெல்லி 223 ரன்களை எடுத்தது. 


ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா 35 ரன்கள் எடுத்தார். இது தவிர, ஹீதர் நைட் மற்றும் எலிஸ் பாரி முறையே 34 மற்றும் 31 ரன்கள் எடுத்தனர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக தாரா நோரிஸ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.