மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய விவகாரத்தில் முழு பொறுப்பையும் ஏற்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் டேவிட் வார்னர் முடிவு செய்துள்ளார்.

Continues below advertisement

ஏப்ரல் 5-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்திவிட்டு வார்னர் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு வியாழக்கிழமை அன்று வேவர்லி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது வார்னர் நேரில் ஆஜராகவில்லை.

தவறான முடிவு - வழக்கறிஞர் விளக்கம்

வார்னரின் சட்டப் பிரதிநிதியான பாபி ஹில், தனது தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தார். அப்போது, தனது வாடிக்கையாளர் இந்தச் சூழலின் தீவிரத்தை உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். ஒரு சமூகக் கூடலில் பங்கேற்ற பிறகு, வார்னர் எடுத்த முடிவு மிகவும் தவறானது என்று குறிப்பிட்ட ஹில், அவர் செய்த தவறை அவர் நன்கு அறிவார் என்று கூறினார். ஊபர் போன்ற வாகன சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தனது காரிலேயே செல்லலாம் என அவர் எடுத்த முடிவு மிகவும் முட்டாள்தனமானது என்றும், நண்பரின் வீட்டில் மூன்று கிளாஸ் ஒயின் அருந்திய பிறகே அவர் இந்த முடிவை எடுத்தார் என்றும் கிரிக்கெட் இணையதளத்திடம் ஹில் விளக்கமளித்தார்.

Continues below advertisement

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தபோதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர், ஈஸ்டர் திருநாளில் ஒயின் அருந்துவது தவறல்ல என்றும், ஆனால் அருந்திவிட்டு வாகனம் ஓட்டலாம் என அவர் வகுத்த 'பிளான் ஏ' தான் தவறாக முடிந்துவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார். சரியான மாற்று வழியைத் தேர்ந்தெடுக்காததே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்று அவர் கூறினார்.

மன்னிப்பு கோரும் வார்னர்

காவல்துறையினர் நடத்திய சுவாசப் பரிசோதனை நேரத்தைக் குறிப்பிட்டு சில சட்ட வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. வார்னர் தனது கடைசி மிடறு மதுவை அருந்திய 11 நிமிடங்களிலேயே காவல்துறையினரால் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தான் செய்த தவறுக்காக வார்னர் மிகவும் வருந்துவதாகவும், இதற்காக அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவார் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதே சமயம், நியூ சவுத் வேல்ஸின் ஒரு சாதாரண குடிமகனைப் போலவே தண்டனையை எதிர்கொள்ளவும் அவர் தயாராக இருப்பதாக விளக்கப்பட்டது.

கேப்டன் பதவிக்கு நெருக்கடி

இந்தக் கைது நடவடிக்கை காரணமாக, சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக வார்னர் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் தலைமை நிர்வாகி லீ ஜெர்மன், வார்னரின் கேப்டன்சி குறித்த முடிவு பின்னாளில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதற்கட்டக் குற்றச்சாட்டுக்குப் பிறகு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை முடிக்க வார்னர் திரும்பினார். இந்த விவகாரத்தில் காவல்துறையின்  பரிசீலனைக்காக ஜூன் 24-ஆம் தேதி மீண்டும் வேவர்லி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.