இலங்கை கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன் விளையாடிய காலத்தில் விளையாடி தனக்கு என்று ஒரு அங்கிகாரத்தை பெற்றவர் சமிந்தா வாஸ். இவர் இடது வேகப்பந்துவீச்சாளராக களமிறங்கி தன்னுடைய அசாத்திய ஸ்விங் பவுலிங் மூலம் பல பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இன்று அவர் தன்னுடைய 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் இலங்கை அணியில் அவர் எவ்வாறு இடம் பிடித்தார்? அவர் செய்த சிறப்பான சாதனைகள் என்னென்ன?
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி இலங்கையின் காலே பகுதியில் இவர் பிறந்தார். தன்னுடைய சிறு வயது முதல் வேகப்பந்துவீச்சில் இவர் அசத்தினார். இதன்காரணமாக் 16 வயது முதல்தர கிரிக்கெட்டில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 13 முதல் தர போட்டிகளில் விளையாடிய போதே இலங்கை தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்த்தார். அதன்விளைவாக 1994ஆம் ஆண்டு தன்னுடைய 20ஆவது வயதில் இலங்கை அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதே ஆண்டில் இந்தியாவிற்கு எதிராக தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியிலும் இவர் களமிறங்கினார். அந்தப் போட்டியில் இந்திய வீரர் நவ்ஜோத் சிங் சித்து விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். அதன்பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கையின் முதல் டெஸ்ட் வெற்றிக்கு இவர் முக்கியமான காரணமாக அமைந்தார்.
அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். அத்துடன் பேட்டிங்கிலும் 33 மற்றும் 36 ரன்கள் அடித்தார். இதனால் அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியிலும் மீண்டும் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேலும் இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை போல் ஒருநாள் போட்டியிலும் சமிந்தா வாஸ் ஒரு மகத்தான சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அதாவது 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இவர் 19 ரன்கள் விட்டு கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேலும் அந்தப் போட்டியில் ஆட்டத்தின் முதல் மூன்று பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட் எடுத்து ஹாட்ரிக் சாதனையையும் படைத்தார். ஒருநாள் போட்டியில் முதல் மூன்று பந்துகளில் விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அந்தப் போட்டியில் இவர் படைத்தார்.
இவர் இலங்கை அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 355 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 322 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 400 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் பயிற்சியாளராக தன்னுடைய புது அவதாரத்தை தொடங்கினார். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.