உலகக்கோப்பை திருவிழா இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் கடைசி 2 இடங்களுக்கான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்று உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள நிலையில், இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான போட்டியில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மல்லுகட்டி நின்றது.


ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே:


இதில், புலவாயோவில் இன்று நடைபெற்ற முக்கிய போட்டியில் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கைத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு மெக்ப்ரைட் – கிராஸ் ஜோடி நல்ல தொடக்கம் தந்தது. இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். 16.1 ஓவர்களில் 51 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. மெக்ப்ரைட் 45 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார்.




அடுத்து வந்த ப்ரண்டன் மெக்முல்லன் அதிரடியாக ஆடினார். அதற்குள் 75 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்த கிராஸ் அவுட்டானார். மெக்முல்லன் 34 பந்துகளில் 6 பவுணடரியுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.  அடுத்து வந்த கேப்டன் பெரிங்டன் 7 ரன்களில் அவுட்டாக, முன்சே 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் மைக்கேல் லீஸ்க் மற்றும் மார்க் வாட் அதிரடி காட்ட ஸ்காட்லாந்து ஸ்கோர் சற்று உயர்ந்தது. மைக்கேல் 34 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 48 ரன்கள் எடுக்க, மார்க் வாட் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் விளாசியது.  


போராடிய பர்ல்:


235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சொந்த மண்ணில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் முதல் பந்திலே விக்கெட் கீப்பர் கும்பி டக் அவுட்டானார். சிறிது நேரத்திலே கேப்டன் எர்வினும் 2 ரன்னில் போல்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீன் வில்லியம்ஸ் 16 பந்துகளில் 12 ரன்களில் எடுத்த நிலையில் போல்டானார். இன்னொசன்ட் கையா 12 ரன்களுக்கு அவுட்டாக 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் ராசா – ரியான் பர்ல் நம்பிக்கை அளித்தனர்.




சிக்கந்தர் ராசா 40 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த வெஸ்லி மாதவரே களமிறங்கினார். அவர் ரியான் பர்லுக்கு ஒத்துழைப்பு அளிக்க ஜிம்பாப்வே அணி போராடியது. ஸ்காட்லாந்து அணிக்கு மிகவும் குடைச்சல் கொடுத்த இந்த ஜோடி 164 ரன்களை எட்டியபோது பிரிந்தது. ரியான் பர்லுக்கு ஒத்துழைப்பு அளித்த மாதவரே 40 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார்.


வெளியேறிய ஜிம்பாப்வே:


அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை ரன்னில் அவுட்டாக தனி ஆளாக போராடிய ரியான் பர்ல் 84 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 83 ரன்கள் எடுத்த நிலையில் 9வது விக்கெட்டாக வெளியேறினார். கடைசியில் 41.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் போட்டியில் இன்னும் ஸ்காட்லாந்து அணி உயிர்ப்புடன் வைத்துள்ளது. கிறிஸ சோலோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஸ்காட்லாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிம்பாப்வே அணிக்கு இனி எந்த போட்டியும் கைவசம் இல்லாததாலும், ரன்ரேட் மைனசில் இருப்பதாலும் ஜிம்பாப்வே தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் ஸ்காட்லாந்து – நெதர்லாந்து அணிகள் 2வது இடத்திற்கு மோத உள்ளன. இதில், ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன்  இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நெதர்லாந்து அணி வெற்றி பெற்றாலும் நல்ல ரன்ரேட் இருந்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.