England Semi Chances: உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியை கண்டுள்ளது.
தொடர் தோல்வியில் இங்கிலாந்து:
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து கோப்பையை மீண்டும் வெல்லும் வாய்ப்புள்ளதாக, உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக கணிக்கப்பட்டது. ஆனால், லீக் சுற்று தொடங்கியது முதலே அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமான தோல்விகளையே பதிவு செய்து வருகிறது. வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் மட்டுமே அந்த அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதைத் தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் அந்த அணி மோசமான தோல்வியையே கண்டுள்ளது.
- நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
- ஆப்கானிஸ்தான் அணியிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியுற்றது
- தென்னாப்பிரிக்கா அணியிடம் 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது
- இலங்கையிடம் 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மண்ணை கவ்வியது
- இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 230 ரன்களை அடிக்க முடியாமல் 100 ரன்கள் வித்தியாசத்தில் 5வது தோல்வியை தழுவியது
புள்ளிப்பட்டியல் விவரம்:
6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியை கண்டிருப்பதன் மூலம், வெறும் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதோடு, அந்த அணியின் ரன் ரேட் விகிதம் மைனஸ் 1.652 ஆக உள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் மிக மோசமான ரன்ரேட் இதுதான். இதனால், அந்த அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு என்பது மிகவும் குறுகலாக தான் உள்ளது.
பிரமாண்ட வெற்றிகள் அவசியம்:
இங்கிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்ல தான் வெற்றி பெறுவது மட்டுமின்றி, மற்ற போட்டிகளின் முடிவுகளும் அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதற்கும் முன்னதாக ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் உடனான 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்ய வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே 8 புள்ளிகளுடன், நேர்மறையான ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியும். இது முதலில் சாத்தியமானால் மட்டுமே, மற்ற போட்டிகளின் முடிவை இங்கிலாந்து அணியால் எதிர்பார்த்து இருக்க முடியும்.
மற்ற போட்டிகளின் முடிவுகள்:
- ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை தோற்று, இந்தியாவிடம் மட்டும் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும்
- நியூசிலாந்து அணி மீதமுள்ள 3 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும்
- ஆஸ்திரேலிய அணியும் மீதமுள்ள 3 லீக் போட்டிகளிலும் தோல்வியுற வேண்டும்
- நியூசிலாந்து அணியை வீழ்த்தும் பாகிஸ்தான் அணி, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியுற வேண்டும்
- பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் வங்கதேசம், இலங்கையிடம் தோல்வியுற வேண்டும்
- ஆப்கானிஸ்தான் அணி இலங்கை, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா அணியுடன் தோல்வியை தழுவி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்
- நெதர்லாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, இங்கிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியுற வேண்டும்
மீதமுள்ள போட்டிகளின் முடிவுகள் மேற்குறிப்பிடப்பட்டபடி அமைந்து, தங்களுக்கு மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் பிரமாண்ட வெற்றிகளை பதிவு செய்தால் மட்டுமே, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
சாம்பியன்ஸ் டிராபியில் சிக்கல்:
இதனிடையே, உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலால் இங்கிலாந்து அணிக்கு புதிய பிரச்னை ஒன்று முளைத்துள்ளது. 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க, மொத்தம் 8 அணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது போட்டியை நடத்தும் பாகிஸ்தான் போக, உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும். லீக் சுற்றின் முடிவில் ஒருவேளை இங்கிலாந்து அணி முதல் 8 இடங்களுக்குள் முன்னேறவில்லை என்றால், சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணியால் பங்கேற்க முடியாது.