பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததை “புஷ்பா” பட பாணியில் கொண்டாடிய வார்னர்.


உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதுவரை 17 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள சூழலில், இன்று (அக்டோபர் 20) 18 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.


ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்: 


பெங்களூருவில் நடைபெறும் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர்.






இவர்கள் கூட்டணி 259 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் சிக்ஸர் மழை பொழிந்தார். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பறக்க விட்டார். மொத்தம் 9 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 14 பவுண்டரிகளை அடித்தார்.






இவ்வாறாக மொத்தம் 124 பந்துகளில் 163 ரன்களை குவித்தார். மேலும், இதுவரை நடைபெற்ற 4 இன்னிங்ஸ்களில் 57 என்ற சராசரியுடன் மொத்தம் 228 ரன்கள் குவித்திருக்கிறார். 


புஷ்பா ஸ்டைல்:



31 வது ஓவரில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் முகமது நவாஸ் வீசிய பந்தில் ஒரு சிங்கிள் அடித்ததன் மூலம் 100 ரன்களை எட்டினார் வார்னர். 






அப்போது தான் சதம் அடித்த மகிழ்ச்சியை புஷ்பா பட பாணியில் கொண்டாடினார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில்  ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார். 






அதேபோல், அண்மையில் புஷ்பா பட ஸ்டைலில் நடனம் ஆடி வீடியோ ஒன்றும் வெளியிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.