2022 ஐபிஎல் தொடருக்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக், அணியில் தக்கவைக்கப்படாமல் ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது குறித்து தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த விக்கெட் கீப்பர் அண்ட் பேட்டர். 


வீரர்கள் தக்கவைப்பு நிகழ்ச்சியை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து அறிவித்தனர். இந்த முறை 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடருக்கு ஆயத்தமாவது பற்றி தினேஷ் கார்த்திக் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். 


அதில், “நான் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணிக்காக மட்டுமல்லாது, எனது மன நிறைவுக்காகவும் விளையாடுவேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் சிறப்பாக இருக்கும். என்னுடைய சொந்த ஊர் சென்னை. ஐபிஎல் போன்ற முக்கியமான தொடர்களில், உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை எதிர்த்து விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதனால், எந்த அணிக்காக விளையாடினாலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த இருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.






ஐபிஎல் வரலாற்றில், 6 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி இருக்கிறார் தினேஷ் கார்த்திக். 36 வயதான அவர், ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட சென்னை அணிக்காக விளையாடியதில்லை. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில், 2 கோடி ரூபாய் ஆரம்ப விலையை தனக்கு நிர்ணயித்து கொண்டு களத்தில் இறங்க இருக்கிறார். 


2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் யுஏஇயில் நடைபெற்றது. அதன்பின்னர் 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. எனினும் அந்தத் தொடரின் பாதியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. அக்டோபர் மாதம் மீண்டும் ஐபிஎல் தொடர் யுஏஇயில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இம்முறை புதிதாக இரண்டு அணிகள் களமிறங்க உள்ளதால் 2022 ஐபிஎல் தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண