இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் நடத்தப்படுவது போலவே வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கரிபீயன் ப்ரீமியர் லீக் நடத்தப்படுகிறது. இதில் நடந்த 17வது போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளும் மோதின.
இதில் முதலில் கயானா அமேசான் அணி பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மோதி 1 ரன்னில் அவுட்டாகவும், அடுத்து வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் ஷாய் ஹோப் களமிறங்கினார். அவர் நிதானம் காட்ட அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.
ஹிட் விக்கெட்:
அவர் நிதானமாக தொடங்கி அதிரடிக்கு மாறினார். அப்போது அவர் ட்ரின்பாகோ அணி வீரர் டெர்ரன்ஸ் ஹிண்ட்ஸ் வீசிய 15வது ஓவரின் முதல் பந்தை ஸ்விட்ச் ஹிட் முறையில் திரும்பி அடிக்க முயற்சித்தார். ஆனால், ஹிண்ட் அந்த பந்தை ஒயிடாக வீசினார். இதனால், பந்தை தவறவிட்ட ஷாய் ஹோப்பின் பேட் அவர் பேட்டை சுற்றிய வேகத்தில் ஸ்டம்பில் பட்டது. இதனால், அவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார்.
த்ரில்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கயானா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் - காலின் முன்ரோ அதிரடி தொடக்கம் அளித்தனர். அபாராக ஆடிய இருவரும் சிக்ஸர், பவுண்டரி விளாசினர். அலெக்ஸ் ஹேல்ஸ் சிக்ஸர்களாக விளாசினார்.
அபாரமாக ஆடிய இந்த ஜோடி 116 ரன்களுக்கு பிரிந்தது. முன்ரோ 30 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் பூரண் டக் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் கார்டி டக் அவுட்டாக ஒரே ஓவரில் 3 விக்கெட் இழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அபார வெற்றி:
மறுமுனையில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 43 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்ஸருடன் 74 ரன்களுக்கு அவுட்டாக, கடைசியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால், ஆந்த்ரே ரஸல் சிக்ஸராக விளாசி 17.2 ஓவரில் ட்ரின்பாகோ 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஸல் 14 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பொல்லார்ட் 14 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.