சேர்ந்தே இருப்பது விருதும் சர்ச்சையும் எனும் அளவுக்கு விருதுகள் எப்போதுமே எதாவது ஒரு சர்ச்சையை கிளப்பிக் கொண்டுதான் இருக்கின்றது. சினிமா மட்டுமில்லை. விளையாட்டுகளிலும் அப்படியே. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது. இதுதான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரரான சோயப் அக்தர் 'தொடர் நாயகன் விருது பாபர் அசாமுக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. பாபர் அசாமுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.' என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு சில ரசிகர்கள் ஆதரவும் சில ரசிகர்கள் எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த தொடரில் அதிக ரன்களை அடித்தவராக பாகிஸ்தான் வீரரான பாபர் அசாமே இருக்கிறார். 6 போட்டிகளில் ஆடி 303 ரன்களை எடுத்திருந்தார். 4 அரைசதங்களை அடித்திருந்தார். அதேநேரத்தில், டேவிட் வார்னர் 7 போட்டிகளில் ஆடி 289 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மூன்று அரைசதங்களை அடித்திருந்தார்.
இருவருமே ஓப்பனர்கள்தான். பாபர் அசாமை விட ஒரு போட்டியில் அதிகமாக ஆடியும் அவரை விட குறைவாகவே ரன்கள் எடுத்திருக்கும் வார்னருக்கு எப்படி தொடர் நாயகன் விருது வழங்கலாம்? என்பதே சோயப் அக்தரின் கூற்றாக இருக்கிறது.
ஆனால், அதே பாகிஸ்தானிலிருந்து டேவிட் வார்னருக்கு ஆதரவாக இன்னொரு குரலும் எழுந்துள்ளது. 'தொடர் நாயகன் விருது என்பது அதிக ரன்கள் அடித்தவருக்காக கொடுப்பது என நினைத்துக் கொள்ளக்கூடாது. ரன்களை தாண்டி அந்த வீரர்கள் போட்டியில் ஏற்படுத்திய தாக்கத்தையும் கவனிக்க வேண்டும். டேவிட் வார்னர் ஒற்றை ஆளாக ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். அதனால்தான் அவருக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது' என வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
வாசிக் அக்ரம் கூறியிருக்கும் இந்த விஷயத்தை குறிப்பாக கவனிக்க வேண்டும். ஒரு வீரர் எத்தனை ரன்கள் அடித்தார் என்பதை விட அந்த ரன்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின என்பது ரொம்பவே முக்கியம்.
சூப்பர் 12 சுற்றின் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் பாபர் அசாம் அரைசதம் அடித்திருந்தார். அட்டகாசமான ஆட்டம். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், பாபர் அசாம் அடித்ததால் மட்டும்தான் பாகிஸ்தான் வென்றதா? என்றால் இல்லை. பாபர் அசாமோடு ரிஸ்வான், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி போன்ற வீரர்களும் ரன்கள் அடித்தனர். பாபர் அசாம் ரன்கள் அடித்தபோதும் அவரின் ஸ்ட்ரைக் ரேட்டின் மீது பலருக்கும் விமர்சனம் இருந்தது. அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 34 பந்துகளில் வெறும் 39 ரன்களை மட்டுமே அடித்திருப்பார். பாகிஸ்தானின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
அதேநேரத்தில், டேவிட் வார்னரை எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலியா அணி கரைசேர்ந்ததே வார்னரின் பெர்ஃபார்மென்ஸால்தான். வார்னருக்கு பிறகு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மிட்செல் மார்ஸ் மட்டுமே ரன்கள் அடித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக வென்றே ஆக வேண்டிய போட்டியில் 89 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். அரையிறுதியில் 49 ரன்களை எடுத்திருந்தார். இறுதிப்போட்டியில் 53 ரன்களை எடுத்திருந்தார். இந்த 3 பெர்ஃபார்மென்ஸ்களுமே ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தது.
பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் அசாமின் பெர்ஃபார்மென்ஸை உருவிவிட்டு பார்த்தாலும் அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டிருக்கும். ஆனால், ஆஸ்திரேலிய அணியிலிருந்து வார்னரின் பெர்ஃபார்மென்ஸை எடுத்துவிட்டால் அந்த அணிக்கு பெரிய அடியாக அமைந்திருக்கும். இதனாலயே பாபர் அசாமுக்கு பதில் வார்னருக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.