IND vs PAK Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 


தடுமாறிய ஷமி:


இதன்படி, பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் - பாபர் அசாம் அணி ஜோடி ஆட்டத்தைத் தொடங்கியது. இந்திய அணிக்காக முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். மிகவும் நேர்த்தியாக லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசும் முகமது ஷமி இன்று முதல் ஓவரில் மிகவும் தடுமாறினார். வழக்கத்திற்கு மாறாக ஒயிட்களை வீசினார். 


பாதியிலே வெளியேற்றம்:


மேலும், முகமது ஷமி முதல் போட்டியைப் போல இல்லாமல் இந்த போட்டியில் பந்துவீச தடுமாறினார். இது ரசிகர்களுக்கு வருத்தத்தைத் ஏற்படுத்தியது. இந்த நிலையில், முகமது ஷமி 3 ஓவரை வீசிய பிறகு போட்டியில் இருந்து இந்திய அணியினரின் அறைக்குத் திரும்பினார். காயம் காரணமாக அவர் பெவிலியனுக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.


முழங்காலில் காயமா?


முகமது ஷமி 3 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தாலும் 5 ஒயிட்களை வீசியிருந்தார். குறிப்பாக, முதல் ஓவரில் மட்டும் அவர் ஒயிட்களை வீசிய காரணத்தால் 11 பந்துகளை வீசினார். ஆனாலும் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.


அவருக்கு முழங்கால் அல்லது வேறு பகுதியில் ஏற்பட்ட காயமே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் போன்ற வலுவான அணிக்கு எதிராக முகமது ஷமி காயம் காரணமாக பாதியிலே வெளியேறியிருப்பது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயம் காரணமாக பாதியிலே வெளியேறிய முகமது ஷமி மீண்டும் ஆட்டத்தில் திரும்பியுள்ளார். அவர் 12வது ஓவரை வீசினார். 


மோசமான சாதனை:


அவரது காயம் குறித்து இந்திய அணியின் மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். பும்ரா இல்லாத சூழலில் முகமது ஷமியின் தேவை இந்திய அணிக்கு மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசிய 3வது பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் முகமது ஷமி இன்று படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இதற்கு முன்பு இந்திய அணிக்காக ஜாகீர் கான், இர்பான் பதான் ஆகிய இருவரும் இதுபோன்று 11 பந்துகளை வீசியிருந்தனர். 


பாகிஸ்தான் அணி தற்போது 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. பாபர் அசாம் 23 ரன்களுக்ழகும், இமாம் உல் ஹக் 10 ரன்களுக்கு அவுட்டாகினர். தற்போது சவுத் ஷகில் - முகமது ரிஸ்வான் ஆடி வருகின்றனர்.