NZ vs SA: இறுதிப்போட்டிக்கு செல்லுமா தென்னாப்பிரிக்கா? மீண்டும் சேசிங்கில் வரலாறு படைக்குமா?
NZ vs SA Semi Final: இறுதிப்போட்டி செல்வதற்கு நியூசிலாந்து அணி நிர்ணயித்த 364 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி போராடி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடப் போகும் அணி யார்? என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதிப் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
363 ரன்கள் டார்கெட்:
இறுதிப்போட்டிக்கு கட்டாயம் சென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி பேட்டிங்கில் பட்டையை கிளப்பியது. அந்த அணியின் ரவீந்திரா, வில்லியம்சனின் அபார சதம் மற்றும் கிளென் ப்லிப்ஸின் அதிரடி 49 ரன்களுடன் 362 ரன்களை குவித்தது.
போராடும் தென்னாப்பிரிக்கா:
இதையடுத்து, 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. கேப்டன் பவுமா - வான்டெர் டுசென் ஜோடி ஆடி வருகிறது. கிரிக்கெட் உலகின் அபாயகரமான அணியாக தென்னாப்பிரிக்க அணி கருதப்பட்டாலும், அவர்கள் சர்வதேச அரங்கில் மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபியை ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளனர். அவர்கள் வென்றுள்ள ஐசிசி தொடர் இது மட்டுமே ஆகும்.
சேசிங்கில் எப்படி?
இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை தங்கள் வசம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடி வரும் தென்னாப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சேசிங் என்பது எப்போதும் கைக்கூடிய ஒன்றாகவே உள்ளது. தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்றை தென்னாப்பிரிக்கா தன்வசம் வைத்துள்ளது.
2006ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 434 ரன்களை அடுத்த 50 ஓவர்களில் எட்டிப்பிடித்து மாபெரும் வரலாற்றைப் படைத்தனர். இதுநாள் வரை இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படவில்லை.
அதேபோல, 2016ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணி டர்பனில் நிர்ணயித்த 372 ரன்களை டேவிட் மில்லரின் சதத்தின் உதவியுடன் எட்டிப்பிடித்தது தென்னாப்பிரிக்கா. அதேபோல, நெதர்லாந்து அணி நிர்ணயித்த 374 ரன்களையும் 2023ம் ஆண்டு ஹராரேவில் எட்டிப்பிடித்தது தென்னாப்பிரிக்கா. இன்று போட்டி நடக்கும் இதே லாகூர் கடாஃபி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி அன்று 352 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி 356 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
பேட்டிங் பலம்:
இதனால், இன்று போட்டி நடக்கும் லாகூர் மைதானத்திலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. அந்த அணியில் வான்டர் டுசென், மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், முல்டர் ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள், மார்கோ ஜான்செனும் அசத்தலாக பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர். இதனால், மேத் ஹென்றி, ஜேமிசன், வில்லியம் ஓரோர்க்கி, ப்ராஸ்வெல் ஆகியோர் பந்துவீச்சை சமாளித்து ஆஸ்திரேலிய வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.