NZ vs SA Semi Final 2025: கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா அதிரடி சதம் - 363 ரன்களை எட்டுமா தென் ஆப்பிரிக்கா?
NZ vs SA Semi Final 2025: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 363 ரன் இலக்கு.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு 363 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா விளையாடியது.
பாகிஸ்தானின் கடாபி மைதானத்தில் நடைபெற்று போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பதிலாக அணியில் கேப்டன் டெம்பா பவுமா விளையாடினார்.
கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா சதம்:
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங், ரச்சின் ரவீந்திரா இருவரும் களமிறங்கினர். நியூசிலாந்து அணி 48 ரன் எடுத்திருந்தபோது 7 ஓவர்களில் வில் யங் விக்கெட்டை லுங்கி நிகிடி எடுத்தார். அவருக்கு அடுத்து வந்த கேன் வில்லியம்சன் ரவீந்திராவுடன் இணைந்து இருவரும் அணியை ஸ்கோரை உயர்த்தினர்.
கேன், ரச்சின் ரவீந்திரா 101 பந்துகளில் 13 பவுண்ட்ரிகள், 1 சிக்ஸர் உடன் 108 ரன் எடுத்து ரபாடா வீசிய பந்தில் அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திராவுக்கு சாம்பியன்ஸ் டிராபி (2025) தொடரில் இது இரண்டாவது சதம். நியூசிலாந்து அணி 212 ரன்னுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது. கேன் வில்லியம்சன்ன் 94 பந்தில் 10 பவுண்ட்ரிகள், 2 சிக்ஸர் உடன் 102 ரன் எடுத்து அவுட் ஆனார். கேன் வில்லியம்சன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15-வது சதத்தை அடித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 19000 ரன்களை கடந்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமை கேன் வில்லியம்சன் பெற்றார்.
அடுத்து வந்த டாம் லாதம் 4 ரன்னில் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். டேரில் மிட்சல் 37 பந்துகளில் 4 பவுண்ட்ரி, 1 சிக்ஸர் உடன் 49 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 257 ரன்னுக்கு 4 விக்கெட் எடுத்திருந்த நியூசிலாந்து அணி டேரில் மிட்சல், க்ளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் சேர்த்து 300 ரன்னை எட்ட வைத்தனர். டேரில் மிட்சல் அவுட் ஆன பிறகு, மைக்கேல் ப்ரேஸ்வெல் பிலிப்ஸ் உடன் இணைந்தார். மைக்கேல் ப்ரேஸ்வெல் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
க்ளென் பிலிப்ஸ் 27 பந்துகளில் 49 ரன் எடுத்தார். நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன் எடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணியில் ரபாடா 2 விக்கெட், லுங்கி நிகிடி 3 விக்கெட்களை எடுத்தனர். வியான் மல்டர் 1 விக்கெட் எடுத்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேற தென்னாப்பிரிக்கா அணிக்கு 363 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.