ஆஸ்திரேலியவில் நடைபெற்ற இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து, இந்திய அணி தற்போது நியூலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரை பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய நிலையில், நாளை தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதையடுத்து, இந்திய அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.


வங்கதேசத்திற்கு எதிரான தொடர்:


டிசம்பர் 4 முதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்  இந்திய அணி,  3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு ஓய்வில் உள்ள கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான, இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது, 


இந்திய அணி விவரம்: 


ரோகித் சர்மா தலைமையிலான அணியில்,  கே.எல். ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் பட்டிதர், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஷபாஸ் அகமது, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர் மற்றும் குல்திப் சென் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத ரவீந்திர ஜடேஜா, வங்கதேச தொடரில் இருந்தும் விலகியுள்ளார். 


 


டிவிட்டரில் டிரெண்டான #Casteist_BCCI:


அதேநேரம், உலகக்கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட, சூர்யகுமார் யாதவிற்கும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன, சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதைகண்டித்தும், பிசிசிஐ-க்கும் எதிராகவும் அவர்களது ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். அதோடு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே பிசிசிஐ முன்னுரிமை அளித்து வீரர்களை தேர்வு செய்வதாகவும், சாதிய பகுபாடு காரணமாக பல திறமையான வீரரகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் சாடியுள்ளனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து #Casteist_BCCI எனும் ஹேஷ்டேக் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. அந்த ஹேஷ்டேக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பிசிசிஐ-க்கு எதிராக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.