WTC Final India: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற, இந்திய அணி கட்டாயமாக சில வெற்றிகளை குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
நெருக்கடிக்கு வழிவகுத்த தோல்வி:
இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி, இறுதிப்போட்டிக்கான இந்தியாவின் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்து வந்து இந்திய அணி, தற்போது 58.33 வெற்றி சதவிகிதத்துடன் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற கைவசம் உள்ள வாய்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்திய அணிக்கு தேவையான கட்டாய வெற்றிகள்:
மற்ற அணிகளைச் சார்ந்து இருக்காமல் தகுதி பெற, இந்தியா தனது மீதமுள்ள ஐந்து போட்டிகளில் ஒரு தோல்வியை கூட எதிர்கொள்ளக் கூடாது. மேலும், இந்தியா 67.54 என்ற வெற்றி சதவிகிதத்துடன் முடிக்க அதிகபட்சமாக ஒரு டிரா மற்றும் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. ஐந்து போட்டிகளிலும் ரோகித் தலைமையிலான அணி வெற்றி பெற்றால், 69.29 வெற்றி சதவிகிதத்துடன் 158 புள்ளிகளைக் குவிக்க முடியும். குறைந்த பட்சம் இரண்டு வெற்றிகளையாவது இந்தியா கைப்பற்றினால் மட்டுமே, மற்ற போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையிலான தங்களுக்கான் வாய்ப்பில் நீடிக்க முடியும். 60-க்கும் அதிகமான வெற்றி சதவிகிதத்தில் நீடிக்க, இந்தியா குறைந்தது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளை டிரா செய்ய வேண்டும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:
நிலை
|
அணிகள்
|
போட்டிகள் |
புள்ளிகள்
|
PCT
|
|||
போட்டி | வெற்றி | தோல்வி | டிரா | ||||
1 | ஆஸ்திரேலியா | 12 | 8 | 3 | 1 | 90 | 62.5 |
2 | இந்தியா | 14 | 8 | 5 | 1 | 98 | 58.33 |
3 | இலங்கை | 9 | 5 | 4 | 0 | 60 | 55.56 |
4 | நியூசிலாந்து | 11 | 6 | 5 | 0 | 72 | 54.54 |
5 | தென்னாப்பிரிக்கா | 8 | 4 | 3 | 1 | 52 | 54.16 |
6 | இங்கிலாந்து | 19 | 9 | 9 | 1 | 93 | 40.79 |
7 | பாகிஸ்தான் | 10 | 4 | 6 | 0 | 40 | 33.33 |
8 | வங்கதேசம் | 10 | 3 | 7 | 0 | 33 | 27.5 |
9 | மேற்கிந்திய தீவுகள் | 9 | 1 | 6 | 2 | 20 | 18.52 |
இந்தியாவிற்கு நெருக்கடி தரும் 4 அணிகள்:
இலங்கை
இலங்கை தங்கள் கைவசம் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால், இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற சூழலை கொண்டுள்ளது. அதன்படி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டு மற்றும் 2025 இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு என மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் இலங்கை கைவசம் உள்ளன. தற்போது 55.56 வெற்றி சதவிகிதத்துடன் அந்த அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இலங்கை தொடர்ந்து நான்கு வெற்றிகளை ஈட்டினால், 108 புள்ளிகள் மற்றும் 69.23 வெற்றி சதவிகிதத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அந்த சூழலில் இந்தியா கட்டாயம் மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, 69.29 வெற்றி சதவிகிதத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
தென்னாப்பிரிக்கா:
வங்கதேசத்தில் ஒரு முக்கியமான தொடரை வென்றதன் மூலம், தென்னாப்பிரிக்கா WTC புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த அணிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு உள்ளூர் தொடர்கள் உள்ளன. அதில் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்கா 69.44 என்ற வெற்றி சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறும். அதன் மூலம் இந்தியா கூடுதலாக ஒரு தோல்வியை கூட சந்திக்கக் கூடாது என்ற நெருக்கடி ஏற்படும்.
நியூசிலாந்து
இந்தியாவை 3-0 என வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்தின் வெற்றி சதவிகிதம் 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் மேலும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதிலும் வெற்றி பெற்றாக்ல் நியூசிலாந்து 64.28 என்ற சிறந்த வெற்றி சதவிகிதத்துடன் புள்ளிப் பட்டியலில் முன்னேற முடியும்.
ஆஸ்திரேலியா
தற்போதைய சூழலில் WTC புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்தாலும், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து இறுதிப் போட்டிக்கு வருவது சாத்தியமில்லை. இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஐந்து மற்றும் இலங்கைக்கு எதிராக இரண்டு என, மீதமுள்ள ஏழு டெஸ்டில் இருந்து நான்கு வெற்றிகளை ஈட்டினால் மட்டுமே ஆஸ்திரேலியா அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.