Test Cricket Incentive BCCI: டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, அதிகபட்சமாக ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சத்தை ஊக்கத்தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


”பிசிசிஐ ஊக்கத்தொகை திட்டம்”


உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயால் தற்போது ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும், வீரர்களுக்கு ரூ.15 லட்சம் போட்டி கட்டணமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், ”இந்திய அணிக்காக ஒரு ஆண்டில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு,  ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.45 லட்சம் கூடுதல் கட்டணமாகப் பெறுவார்கள். அணியில் இருந்தும் பிளேயிங் லெவனில் இல்லாமல் இருந்தவர்களுக்கு, 22.5 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். 5 அல்லது 6 போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு, போட்டி கட்டணத்துடன் கூடுதலாக ஒவ்வொரு போட்டிக்கும் கூடுதலாக 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த பிரிவில் அணியில் இருந்தும் பிளேயிங் லெவனில் இல்லாமல் இருந்தவர்களுக்கு, 15 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். 4 போட்டிகளுக்கும் குறைவான போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு எந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படாது. இந்த திட்டமானது 2022-2023 சீசனில் இருந்தே தொடங்கும் என” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.


 






திட்டத்தின் நோக்கம் என்ன?


இந்த திட்டம் தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மதிப்பிற்குரிய விளையாட்டு வீரர்களுக்கு நிதி வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மூத்த வீரர்களுக்கான 'டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்' தொடங்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம்:


ரஞ்சி டிராபிக்கு முன்னுரிமை அளிக்க ஒப்பந்த வீரர்களை வலியுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காததால், பிசிசிஐ அவர்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஷ்ரேயாஸ் நீக்கப்பட்டார்.  அதே நேரத்தில் இஷான் கிஷன் கடந்த நவம்பர் முதல் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும்  பங்கேற்கவில்லை. டி-20 லீக் போட்டிகளுக்கு வீரர்கள் அதிக கவனம் செலுத்தும் வேளையில், ஊக்கத்தொகை வழங்கும் BCCI இன் திட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உத்வேகம் சேர்க்கும் என நம்பப்படுகிறது.