இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தொலைக்காட்சியில் காட்சியளிக்கும் விதம் வெட்கக் கேடாக உள்ளதாக, உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதோடு, ரோகித் சர்மா கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 


ரோகித் சர்மாவை விமர்சித்த கபில் தேவ்:


இந்திய அணி வீரர்கள் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும், சரியாக விளையாடாத வீரர்கள் உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு அதிரடி கருத்துகளை கபில் தேவ் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்களின் உடற்தகுதி குறித்து பேசியுள்ளார். அப்போது, ரோகித் சர்மாவின் உடற்தகுதி குறித்து கபில்தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.


”வெட்கக்கேடானது”


அதன்படி, ”உடற்தகுதியுடன் இருப்பது என்பது அவசியம், அதிலும் கேப்டன் நல்ல உடற்தகுதியுடன் இருப்பது கூடுதல் அவசியமானது. நீங்கள் உடற்தகுதியுடன் இல்லாமல் இருப்பது மிகவும் வெட்கக்கேடானது. ரோகித் சர்மா உடற்தகுதிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் அவரது உடற்தகுதி குறித்து பேசினால் அவர் சற்றே கூடுதல் எடையை கொண்டுள்ளார்.  ஒருவரை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், நேரடியாக பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆனால் நான் பார்த்த வரையில் ரோகித் சர்மா நல்ல வீரர் மற்றும் கேப்டன் ஆனால் இன்னும் அவர் உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். விராட் கோலியை பாருங்கள், அவர் பின்பற்றுவது தான் உடற்தகுதி. சக வீரர்களை கண்டு இந்திய வீரர்கள் உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.


ரோகித்தும்.. உடற்தகுதியும்..


ரோகித் சர்மாவின் உடற்தகுதி தொடர்பான விமர்சனங்கள் என்பது அவ்வப்போது தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால், பொதுவெளியில் அதுகுறித்து ரோகித் சர்மா பெரிதாக கருத்து தெரிவிப்பதில்லை. தனது ஆட்டதிலேயே அவர் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணியின் மற்ற வீரர்கள் பேட்டிங் செய்ய தடுமாறினர். ஆனால், சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னின்ஸிலும் அதிரடியாக ஆடி ரோகித் சர்மா ரன் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.


பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்:


4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதைதொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, இந்தூர் மைதானத்தில் வரும் 1ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற, ரோகித் சர்மா தலைமயிலான இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது.