இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று நாக்பூரில் தொடங்கியது. இந்த நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது. ஜடேஜா, அஸ்வின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.


போல்டான ஸ்மித்:


நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஜடேஜா இன்றைய நாளில் ஆஸ்திரேலியாவின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நிலைகுலைய வைத்தார். 2 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஸ்டீவ் ஸ்மித் – லபுசேனே ஜோடி ஈடுபட்டது.






அவர்கள் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை 84 ரன்களாக உயர்த்தியபோது இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது சுழலில் லபுசேனே 49 ரன்களில் அவுட்டானார். பின்னர், அபாயகரமான ஸ்டீவ் ஸ்மித்தை 37 ரன்களில் போல்டாக்கி அசத்தினார். ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 42வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்டீவ் ஸ்மித் ஜடேஜாவின் பந்தில் போல்டானார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


கம்பேக் கொடுத்த ஜடேஜா:


தான் போல்டானதை நினைத்து ஒரு நொடி ஸ்டீவ் ஸ்மித்தே ஆச்சரியப்பட்டார். அந்தளவு ஜடேஜா வீசிய அந்த பந்து நொடிப்பொழுதில் ஸ்மித்தின் பேட்டையும் கடந்து ஸ்டம்பைத் தாக்கியது. அபாயகரமான பேட்ஸ்மேனான ஸ்மித் ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் மட்டும் ஜடேஜா சுழலில் லபுசேனே, ஸ்டீவ் ஸ்மித், ரென்ஷா, ஹாண்ட்ஸ்கோம்ப், முர்பி ஆகிய 5 பேரையும் அவுட்டாக்கினார்.


நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணிக்க முழு ஃபார்முடன் திரும்பிய ஜடேஜா முதல் இன்னிங்சிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 247 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியிலே ஜடேஜா 250வது விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது 34 வயதான ஜடேஜா 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 17 அரைசதங்கள் உள்பட 2523 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி 247 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 171 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2447 ரன்களையும், 189 விக்கெட்டுகளையும், 64 டி20 போட்டிகளில் ஆடி 457 ரன்களையும், 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமின்றி ஐ.பி.எல்.லில் 210 போட்டிகளில் ஆடி 2502 ரன்களையும், 132 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


மேலும் படிக்க:Ashwin Test Record: அதிவேக 450.. கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளிய அஷ்வின்.. சாதனை மேல் சாதனை..


மேலும் படிக்க: Ashwin Ravichandran : இந்தியாவிலேயே முதல் வீரர்...வரலாறு படைத்த தமிழன்...வார்னே வரிசையில் அஸ்வின்...!