மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் உள்ள மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 177 ரன்களில் சுருண்டது. ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் மிரட்டினர். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களுடன் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை அஸ்வின் படைத்தார். சர்வதேச அளவில் ஷேன் வார்னே மற்றும் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைத்த மூன்றாவது வீரர் ஆவார்.




மேலும், இந்திய அளவில் 450 விக்கெட்டுகளை அதிவேகமாக கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். இதற்கு முன்பு இந்திய அணிக்காக இந்த சாதனையை தன்வசம் அனில் கும்ப்ளே படைத்திருந்தார். அவர் 93 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும், சர்வதேச அளவில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 89 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் படைத்த சாதனையை முரளிதரன் 80 டெஸ்ட் போட்டிகளிலே படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அனில் கும்ப்ளே 2005ம் ஆண்டு ஈடன்கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




அஸ்வின் இதுவரை 89 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 452 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆகும். ஒரு இன்னிங்சில் மட்டும் 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். தொடரில் 157 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், கவாஜா தலா 1 ரன்னில் ஆட்டமிழக்க, லபுசேனே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து 82 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, ஹாண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி சிறிது நேரம் சிறப்பாக ஆடினர். பின்னர் கேப்டன் கம்மின்ஸ் உள்பட டெயிலண்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய 177 ரன்களில் சுருண்டது.  தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா அதிரடியாகவும், கே.எல்.ராகுல் நிதானமாகவும் ஆடி வருகின்றனர். 


மேலும் படிக்க: IND VS AUS 1ST TEST: இந்திய அணி அபார பந்துவீச்சு.. சுழலில் சிக்கி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா


மேலும் படிக்க:  Ashwin Ravichandran : இந்தியாவிலேயே முதல் வீரர்...வரலாறு படைத்த தமிழன்...வார்னே வரிசையில் அஸ்வின்...!