நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நாளை நடக்கவுள்ள 3வது டி20 போட்டியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். நியூசிலாந்து பயணம் செய்துள்ள ஹர்திக் பண்டியா தலைமையிலான இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதாக திட்டமிடப்பட்டது. இதில் முதல் போட்டி மழையால் தடைபட்டுவிட்டது. இந்தியாவுடனான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து 3வது டி20 போட்டியில் இருந்து விலகுகிறார் என சொல்லப்பட்ட நிலையில், போட்டியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 






நியூசிலாந்து அணி நிர்வாகத்தின் சார்பாக, அணியின் பயிற்சியாளர் கேரி கூறியதாவது, “அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது போட்டியில் இருந்து விலகுகிறார். அவர் இந்த போட்டியில் இருந்து விலகுவர்தற்கான காரணம், அவர் மருத்துவரைச் சந்திக்க ஏற்கனவே அனுமதி வாங்கியுள்ளார். ஆனால் அது எங்களின் போட்டி அட்டவணைக்கு ஏற்றவாரு இல்லை. அவர் மருத்துவரைச் சந்திப்பதற்கும் அவரது முழங்கையில் நீண்டகாலமாக உள்ள காயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.


மேலும், ஒருநாள் போட்டியில் அவர் அணியுடன் இணைந்து கொள்வார்” எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு பதிலாக அணியில் மார்க் சாம்ப்மென் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியினை டிம் சவுதி 3வது டி20 போட்டியில் வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை நியூசிலாந்தின் நெய்ப்ரில் உள்ள மைதானத்தில் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெறவுள்ளது. 


இதற்கு முன்னதாக நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களில் சுருண்டது.
இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசினார் இளம் வீரர் தீபக் ஹூடா. 


தீபக்ஹூடா அசத்தல்:


192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சாவலை அளித்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.
குறிப்பாக தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19 ஆவது ஓவரை வீசிய தீபக் ஹூடா அந்த ஓவரின் 2ஆவது பந்தில் இஷ் சோதியை ஆட்டமிழக்கச் செய்தார்.


அதைத்தொடர்ந்து அடுத்த பந்தில் சவுதீயை பெவிலியன் திரும்பச் செய்தார். அதே ஓவரின் 5வது பந்தில் மில்னே விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். முன்னதாக, 13ஆவது ஓவரில் டாரில் மிட்செல் விக்கெட்டையும் கைப்பற்றினார். மொத்தம் 2.5 ஓவர்களே வீசிய தீபக் ஹூடா நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பேக் டூ பேக் அனுப்ப முக்கிய பந்துவீச்சாளராக இன்று உருவெடுத்தார் தீபக் ஹூடா.