ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடர்  நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி தண்டர் – அடிலெய்ட் ஸ்ட்ரைக்ஸ் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த அடிலெய்ட் ஸ்ட்ரைக்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.


15 ரன்களுக்கு ஆல் அவுட்:


இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி களமிறங்கியது. அடிலெய்ட் அணியினர் பந்துவீச்சில் அனல் பறந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், சிட்னி அணியினர் 5.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


சிட்னி அணியில் 5 பேர் டக் அவுட்டாகினர். ப்ரெண்டன் டோக்கேட் 4 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம் ஆகும். அடிலெய்ட் அணியில் அதிகபட்சமாக ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வெஸ் அகர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால், அடிலெய்ட் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 



image source SonyLIV


 சிட்னியில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, அடிலெய்ட் பேட்டிங்கை ஷார்ட் – வெதரால்ட் ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. ஷார்ட் 9 ரன்களிலும், வெதரால்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஆம் ஹோஸ் 4 ரன்களில் அவுட்டானார்.


அடிலெய்ட் அபாரம்:


பின்னர், கிறிஸ்லின் – டி கிராண்ட்ஹோம் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ஸ்கோர் 98 ரன்களை எட்டியபோது கிறிஸ்லின் 36 ரன்களில் ஆட்டமிழக்க, கிராண்ட்ஹோமும் 33 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. சிட்னி அணியில் ஆப்கானைச் சேர்ந்த பரூக்கி 3 விக்கெட்டுகளையும், சந்து, டேனியல் சாம்ஸ், ப்ரெண்டன் டோக்கெட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


தொடர்ந்து 140 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர் அணி மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து பவர்ப்ளே முடிவதற்குள் ஒட்டுமொத்த விக்கெட்டுகளையும் பறிகொடுத்து அவுட்டானது. ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகவே அமைந்துள்ளது.


சர்வதேச அளவில் இதற்கு முன்பு செக் குடியரசு அணிக்கு எதிராக துருக்கு அணி 21 ரன்கள் எடுத்ததே மிகவும் குறைந்தபட்ச ரன்னாக இருந்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் ஆடிய அணிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடப்பு டி20 உலகக்கோப்பையில் ஹாங்காங் அணி 38 ரன்கள் எடுத்தது குறைந்தபட்சமாக இருந்தது.