இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஒரு காலத்தில் ஸ்விங்கின் மன்னராக இருந்த புவனேஷ்வர் குமார், போதிய விக்கெட் எடுக்காததால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 


புவனேஷ்வர் குமார் தனது கடைசி டி20 போட்டியில் இந்தியாவுக்காக நவம்பர் 2022 நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் இந்தப் போட்டியில் விளையாடினார், இதில் 4 ஓவர்கள் வீசியதில் அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. இந்தப் போட்டி டை ஆனது.


இந்தநிலையில், இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முன் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு தீபாவளிக்கு முன்னதாக தேர்வாளர்கள் ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளனர். அதற்காகவே அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.


உலகக் கோப்பைக்கு பிறகு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு: 


2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்ற அணிகளுக்கு மிகவும் ஆபத்தான அணியாக இருந்து வருகிறது. இந்தியா இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 8லிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும், அரையிறுதிக்கு தகுதிபெற்றது. உலகக் கோப்பைக்கு பிறகு பல முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன்பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணிக்கு புவனேஷ்வர் குமார் திரும்பலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'விடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர்,” உலகக் கோப்பை 2023க்கு பிறகு தேர்வுக்குழு மூத்த பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் நமக்குத் தேவை. அவர் மீண்டும் அழைக்கப்படலாம்.” என தெரிவித்தார். 






சையத் முஷ்டாக் அலி டிராபியில் கலக்கிய புவனேஷ்வர்குமார்: 


சமீபத்தில் விளையாடிய சையத் முஷ்டாக் அலி டிராபியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டார். அவர் 7 போட்டிகளில் 9.31 என்ற சிறந்த சராசரியில் 16 விக்கெட்டுகளை எடுத்தார். அபாரமாக பந்துவீசி இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 விக்கெட்டுகளை இரண்டு முறை வீழ்த்திய சாதனையை படைத்தார்.


புவனேஷ்வர் இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடி அசத்தியுள்ளார். இதுவரை 21 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 87 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி டெஸ்டில் 63 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளையும், டி20யில் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 






ஐபிஎல்-லில் சொதப்பிய புவி:


ஐபிஎல் 2023ல் பங்கேற்ற புவனேஷ்வர் குமார் 14 ஆட்டங்களில் விளையாடி 8.33 என்ற பொருளாதார விகிதத்தில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஐபிஎல்லில் அவரது மோசமான சாதனையாகும். இதனால் அவர் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை. மேலும் அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை.