Rohit Sharma: யஷஷ்வி ஜெய்ஷ்வாலின் அதிரடி ஆட்டம் தொடர்பான, இங்கிலாந்து வீரரின் கருத்துக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதிலடி தந்துள்ளார். 


டெஸ்டில் இங்கிலாந்தின் அணுகுமுறை:


இந்திய அணியின் இளம் வீரர் யஷஷ்வி ஜெய்ஷ்வால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக பேசியிருந்த இங்கிலாந்து அணியின் பென் டக்கெட், “நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் பின்பற்றும் அதிரடியான அணுகுமுறை மற்ற அணிகளிலும் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக தான், ஜெய்ஷ்வால் போன்ற வீரர்களும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுகின்றனர்” என கூறியிருந்தார்.


”ரிஷப் பண்ட் தெரியுமா?”


இந்நிலையில் தான் நடப்பு டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நாளை, தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜெய்ஷ்வால் தொடர்பான பென் டக்கெட் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த போது, ”ஜெய்ஷ்வால் இங்கிலாந்து அணியிடம் இருந்து கற்றுக்கொள்கிறாரா? எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என ஒரு வீரர் இருந்தார். அவரது விளையாட்டை அநேகமாக டக்கெட் பார்த்து இருக்க மாட்டார் போல. பேஸ்பால் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. நான் யாரிடமிருந்தும் அந்த விளையாட்டை பார்த்ததில்லை. கடந்த முறை இங்கு விளையாடியதை விட இங்கிலாந்து இந்த முறை சிறப்பாக விளையாடியுள்ளது. ஆனால் பேஸ்பால் என்றால் என்ன என்று எனக்கு இன்னும் தெரியவில்லை” என ரோகித் சர்மா கூறியுள்ளார்.


ரிஷப் பண்டின் அதிரடி:


டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடியான அணுகுமுறை, பேஸ்பால் என குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், அதுபற்றி தனக்கு தெரியாது என ரோகித் தெரிவித்துள்ளார். அதோடு, டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான பேட்டிங் என்பது ஏற்கனவே இந்திய அணி பின்பற்றும் அணுகுமுறை தான் என்பதை, ரிஷப் பண்டை குறிப்பிட்டு ரோகித் விளக்கியுள்ளார். கப்பா மைதானத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி,  ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ரிஷப் பண்ட் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், விபத்து காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக, ரிஷப் பண்ட் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


கவனம் ஈர்த்த ஜெய்ஷவால்:


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 96 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.  விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டி மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அடுத்தடுத்து இரட்டை சதம் விளாசினார். இறுதியாக ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் ஜெய்ஸ்வால் முறையே 73 மற்றும் 37 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற,  சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ஜெய்ஷ்வால் பெற்று இருக்கிறார்.