BCCI Rohit Kohli: இந்திய கிரிக்கெட் அணியின் 4 மூத்த வீரர்களும் கடைசியாக சேர்ந்து விளையாடுவது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடராகவே இருக்கலாம் என கூறப்படுகிறது.


உள்ளூர் டெஸ்ட் தொடரில் படுதோல்வி:


நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்ளூரில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்து படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் தொடக்கத்திற்கு முன்பாகவே, சில மூத்த இந்திய வீரர்களின் எதிர்காலம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப்பயணத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய நான்கு மூத்த வீரர்களில் குறைந்தபட்சம் இருவருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி தொடராக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. 


பிசிசிஐ ஆலோசனை:


பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் ஆகியோருக்கு இடையே,  மூத்த வீரர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் ஆஸ்திரேலியா தொடருக்கு ஏற்கனவே வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதில் பெரிய மாற்றம் இருக்காது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம்,  இங்கிலாந்தில் WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்றால், நான்கு சூப்பர் சீனியர்களும் அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மொத்தமாக பங்கேற்க மாட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது. ரோகித், கோலி, அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய நான்கு பேரும், இந்திய அணிக்காக உள்ளூரில் சேர்ந்து விளையாடிய கடைசி தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மூத்த வீரர்களுக்கான மாற்று இளம் வீரர்கள்:


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில், இந்தியா WTC இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால், இங்கிலாந்தில் அணிக்கு தொடரில் இருந்து தேர்வுக் குழு நீண்ட கால வாய்ப்புகளை நோக்கி நகர நிர்பந்திக்கப்படலாம். சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்கும் சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம்.



  • வாஷிங்டன் சுந்தர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வலுவான வாய்ப்பாக உருவாகி வருவதால், ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன், இந்திய டெஸ்ட் அணியில் அஷ்வினின் எதிர்காலம் விவாதிக்கப்படலாம்.

  • ஜடேஜா சிறந்த உடற்தகுதி மற்றும் வெளிநாட்டு தடங்களில் கைதேர்ந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும், அக்சர் படேல் மற்றும் மானவ் சுதார் ஆகியோர் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ற மாற்று வீரர்களாக தயார் நிலையில் உள்ளனர்.

  • கடந்த பிப்ரவரி 2021 முதல் தற்போதைய போட்டி வரை, கேப்டன் ரோகித் ஷர்மா  உள்ளூரில் 35 இன்னிங்ஸ்களில் 37.81 சராசரியில் 4 சதங்களுடன் 1210 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால், கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஆறு முறை 10 ரன்களுக்கு குறைவாகவும், 2 முறை 20 ரன்களுக்கும் குறைவாகவும் ஆட்டமிழந்துள்ளார். 2 முறை மட்டுமே அரைசதம் கடந்துள்ளார்.

  • இதே காலகட்டத்தில், விராட் கோலி உள்ளூரில் 25 இன்னிங்ஸ்களில் விளையாடி 742 ரன்களுடன் ஒரு சதத்தை மட்டுமே எடுத்துள்ளார்.


கோலி 4 ஆண்டுகளாக மோசமான ஃபார்மில் இருந்தபோதிலும் உடற்தகுதி காரணமாக அணியில் தொடரக் கூடும் எனவும், அதேநேரம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இந்த சுழற்சியைத் தாண்டி ரோகித் விளையாடுவது கடினம் என்றும் கூறப்படுகிறது. அப்படி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றால் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.