இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது

ஆசியக் கோப்பை அணியில் இடமில்லை

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கடந்த இரண்டு நாட்களாக அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்திய செய்தி – ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆசியக் கோப்பை அணியில் இடம் மறுக்கப்பட்டது. ஐபிஎல் 2025-இல் 600 ரன்களுக்கு மேல் சேர்த்து, அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியும், ஒருநாள் கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியும் வந்தார். இருந்தும், ஆசியக் கோப்பை அணியில் அவர் இடம்பெறவில்லை. இதனால், ரசிகர்களும் கிரிக்கெட் வட்டாரங்களும் "ஸ்ரேயாஸ்  தவிர்க்கும் காரணம் என்ன?" என்ற கேள்வியில் மூழ்கினர்.

பிசிசிஐவின் புதிய யோசனை – கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, பிசிசிஐ ஒரு சிறப்பு திட்டத்தை வகுத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை நியமிக்கும் யோசனை உருவாகியுள்ளது. முன்பு, அனைத்து வடிவங்களிலும் ஷுப்மான் கில்லுக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்படலாம் என செய்திகள் வந்தன. அதற்கான முதல் படியாக கில்லுக்கு ஆசியக் கோப்பை துணை கேப்டனாக பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது, ஒருநாள் போட்டிகளில் தனியாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்சி கொடுப்பது குறித்து பேச்சுவார்த்தை  நடப்பதாகக் கூறப்படுகிறது.

ரோஹித்தின் எதிர்க்காலம்?

தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ள ரோஹித், இன்னும் எவ்வளவு காலம் ஒருநாள் அணியில் தொடர்வார் என்பது தெளிவாக தெரியவில்லை. ரோஹித் தனது எதிர்காலம் குறித்து முடிவு எடுத்த பிறகு தான், இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

2027 உலகக் கோப்பை 

2027-இல் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தான் பிசிசிஐயின் அடுத்த பெரிய குறிக்கோள். அதற்கு முன்பே அணிக்கு நிலையான கேப்டனைக் கொண்டு வந்து, அணியை கட்டமைக்கும் முயற்சியில் நிர்வாகம் உள்ளது. அந்தப் பொறுப்புக்கு ஸ்ரேயாஸ் ஐயரே சரியான தேர்வாக இருக்கலாம் என்பதே சமீபத்திய தகவலாக உள்ளது

ஐபிஎல்-ல் சாதித்த ஸ்ரேயாஸ் 

ஸ்ரேயாஸ் ஐயரின்  கேப்டன்சி பற்றி தனியாகச் சொல்லத் தேவையில்லை. 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சாம்பியனாக்கிய அவர், 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்குக் கொண்டு சென்றார். அந்த சீசனில் சாம்பியன் பட்டம் தவறியிருந்தாலும், தனது புத்திசாலித்தனமான கேப்டன்சியால் விமர்சகர்களையும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் கவர்ந்தார். மேலும, அந்த தொடரில் 600 ரன்களுக்கு மேல் சேர்த்து, பேட்டிலும் அசத்தியிருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ஆசியக் கோப்பை அணியில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தாலும், கேப்டனாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்ற தகவல், அவரை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கை அளிக்கிறது. “ஐபிஎல் மைதானத்தில் நிரூபித்தவர், இந்திய அணிக்கும் தலைமை தாங்குவார்” என்ற உற்சாகம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.