இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலகும் என்னும் முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்திய விலகல்?
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல்கள் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் இப்போதைக்கு விலகி இருக்க முடிவு செய்துள்ளது.அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் பெண்கள் எமர்ஜிங் ஆசியக் கோப்பையிலிருந்தும், செப்டம்பரில் நடைபெறும் ஆண்கள் ஆசியக் கோப்பையிலிருந்தும் விலகுவதாக பிசிசிஐ ஏசிசிக்கு அறிவித்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய விலக காரணம்?
தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தலைமை தாங்குகிறார், இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவரும் ஆவார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டை தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. "பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரை தலைவராகக் கொண்ட ஏ.சி.சி ஏற்பாடு செய்யும் போட்டியில் இந்திய அணி விளையாட முடியாது. அதுதான் நாட்டின் உணர்வு. வரவிருக்கும் பெண்கள் எமெர்ஜிங் ஆசிய கோப்பை அணிகளுக்கான ஆசியக் கோப்பையில் இருந்து நாங்கள் விலகுவது குறித்து ஏ.சி.சி-யிடம் வாய்மொழியாகத் தெரிவித்துள்ளோம், மேலும் அவர்களின் நிகழ்வுகளில் எங்கள் எதிர்கால பங்கேற்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், ”என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியக்கோப்பை ஒத்திவைப்பு?
பிசிசிஐயின் இந்த நிலைப்பாடு, செப்டம்பர் மாதம் இந்தியா நடத்தவிருந்த ஆண்கள் ஆசிய கோப்பையை கேள்விக்குறியாக வைக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, தற்போதைக்கு ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் பெரும்பாலான ஸ்பான்சர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தியா இல்லாமல் ஆசியக் கோப்பை நடத்துவது சாத்தியமில்லை என்பதை பிசிசிஐ அறிந்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பணம் புரளும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இல்லாத ஆசியக் கோப்பை ஒளிபரப்பாளர்களுக்கு பெரிய அளவில் பார்வையாளர்களையும் தராது என்பதையும் பிசிசிஐ புரிந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் ஐந்து முழு உறுப்பினர்களான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை ஒளிபரப்பு வருவாயிலிருந்து தலா 15 சதவீதத்தைப் பெறுகின்றன, மீதமுள்ளவை இதர மற்றும் துணை நிறுவனங்களிடையே விநியோகிக்கப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பையிலும், இந்தியா-பாகிஸ்தான் சூழ்நிலையால் பாதிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் போட்டியை நடத்தியதால், இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. இந்தியா தனது போட்டிகளை இலங்கையில் விளையாடுவதை பிசிசிஐ உறுதி செய்தது. பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தவறியதாலும், கொழும்பில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா பட்டத்தை வென்றதாலும், பிசிபியைப் பொறுத்தவரை, இந்த போட்டித் தொடர் பராபட்சமாக நடந்ததால விமர்சனம் செய்யப்பட்டது.