இந்திய கிரிக்கெட் அணிக்கான முதன்மை ஸ்பான்சர் ஆக இருக்க, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்து பிசிசிஐ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சூதாட்ட நிறுவனங்களுக்கு தடை:


இந்திய கிரிக்கெட் அணிக்கான முதன்மை ஸ்பான்சர் ஆக இருக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அண்மையில் அறிவித்தது. அதேநேரம், அந்த பிரிவில் விண்ணப்பிக்க குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது. அதன்படி, விளையாட்டு வீரர்களுக்கான ஆடை உற்பத்தியாளர், போதை பொருட்கள், பந்தயம், கிரிப்டோகரன்சி, பணத்தை வைத்து விளையாடும் போட்டி (ஃபேண்டசி கேமை தவர), புகையிலை, ஆபாசப்படங்கள் மற்றும் மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தக்கூடிய வகையிலான துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், பிசிசிஐயின் முதன்மை ஸ்பான்சருக்கான ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஏன் ஆடை உற்பத்தியாளர்களுக்கு தடை:


விளையாட்டு வீரர்களுக்கான ஆடை உள்ளிட்ட உபகரணங்களை தயாரித்து வரும், அடிடாஸ் நிறுவனம் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஒரு விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என்பதால், அந்த துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பம் விநியோகம்:


இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக இருப்பதற்கான விண்ணப்பங்களை விருப்பமுள்ளவர்கள் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம் என, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 5 லட்ச ரூபாய் என்ற திரும்ப பெறமுடியாத கட்டணத்தை செலுத்தி விருப்பமுள்ள நிறுவனங்கள், இந்திய கிரிக்கெட் அணிக்கான முதன்மை ஸ்பான்சர்ஷிப்பை பெற விண்ணப்பிக்கலாம். இந்த கட்டணம் மற்ற வரிகளுடன் சேர்ந்து 5 லட்சத்து 90 ரூபாய் ஆகும். வரும் 26ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்பவர்கள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஏலத்திற்கு தகுதியுடையவர்கள். விண்ணப்பம்  வாங்குவதால் மட்டும் எந்த ஒரு நபராலும் ஏலத்தை எடுக்க முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


முதன்மை ஸ்பான்சர் என்றால் என்ன?


முதன்மை ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றும் நிறுவனத்திற்கு வீரர்களுக்கான சீருடையில், முகப்பு பக்கத்தில் விளம்பரத்திற்கான அதிகப்படியான இடம் ஒதுக்கப்படும். இதற்காக பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அண்மை காலங்களில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், இந்திய ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், ஒப்பந்ததின் மதிப்பு முன்பு இருந்ததை விட சரிவடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பைஜுஸ் நிறுவனம் இந்திய அணியின் முதன்மை ஸ்பான்சராக இருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டோடு தனது 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது  287 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதைதொடர்ந்து தான் தற்போது, புதிய முதன்மை ஸ்பான்சருக்கு இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.