ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரை யாரும் எதிர்பாராத விதமாக, வங்கதேச அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. இதைதொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 14ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் தான், அடுத்த 3 மாதங்களுக்கு இந்திய அணி பங்கேற்க உள்ள தொடர்களுக்கான, சுற்றுப்பயண பட்டியலை இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலகட்டத்தில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் அணிகள், அடுத்தடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளை கொண்ட, தொடர்களுக்கான அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்தியா வரும் இலங்கை அணி:
முதலாவதாக வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை அணி, இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இருபது ஓவர் தொடரின் 3 போட்டிகள், ஜனவரி-3, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, புனே மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளன. அதைதொடர்ந்து, ஜனவரி 10 முதல் 15ம் தேதி வரையில் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், கவுகாத்தி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம்:
இலங்கையை தொடர்ந்து, நியூசிலாந்து அணியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜனவரி 18ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரையில் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முறையே, ஐதராபாத், ராய்பூர் மற்றும் ராஞ்சி பகுதிகளில் நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரானது, ஜனவரி 27ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரையில் ராஞ்சி, லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது. அண்மையில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, இருபது ஓவர் தொடரை கைப்பற்றினாலும், ஒருநாள் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா Vs ஆஸ்திரேலியா:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டி நாக்பூரில் நடைபெற உள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி தர்மசாலாவிலும், கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 9ம் தேதி அகமதாபாத்திலும் தொடங்கி நடைபெற உள்ளன. அதைதொடர்ந்து, இறுதியாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரையில், மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது.