இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்தது. இந்தநிலையில், மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 25 முதல் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி தொடங்குகிறது. நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளனர். 


இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பர்சனல் வேலை காரணமாக விலகியுள்ளார். கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டால், விராட் கோலி இடம்பெறலாம். அதேபோல், கே.எல்.ராகுல் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் அணிக்கு திரும்பலாம். ரவீந்திர ஜடேஜாவின் காயம் தீவிரமாக உள்ளதால் முழு தொடரில் இருந்தும் வெளியேறலாம். தற்போது இவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். 


புஜாராவுக்கு இடமா..? 


சுப்மான் கில்லின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், கடைசி மூன்று டெஸ்ட்களுக்கு சேதேஷ்வர் புஜாரா அழைக்கப்படலாம். இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ரஞ்சியில் புஜாரா தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார்.


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்டுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி எப்படி இருக்கும்?


 ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சேதேஷ்வர் புஜாரா, சர்ஃபராஸ் கான், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரை (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், வாஷிங்டன். , அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா. 


2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் நிலைமை என்ன? 


இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது ஷமி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களம் இறங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஆரம்பம் முதலே ஷமி இந்திய அணியில் இடம்பெறவில்லை. முதல் டெஸ்டில் ரவீந்திர ஜடேஜாவும், கேஎல் ராகுலும் விளையாடினர், ஆனால் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் விளையாட மாட்டார்கள். இந்த வீரர்கள் இல்லாமல், ஹைதராபாத் அணியின் தோல்விக்கு பழிவாங்குவது ரோஹித் படைக்கு எளிதாக இருக்காது. 


ஜடேஜா மற்றும் ராகுல் ஆகியோர் இல்லாத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சவுரவ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடும் லெவனில் இடம்பிடிக்கலாம். அதே நேரத்தில் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக விளையாட முடியும்.