முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி ’நோ லுக்’ ரன் அவுட் மூலம் பிரபலமானவர். எம்.எஸ்.தோனி பந்து வரும் திசையை நோக்கி திரும்பி நின்று பின்னாடி இருக்கு ஸ்டெம்புகளை பார்க்காமல் த்ரோ செய்து எதிரணி வீரர்களை ரன் அவுட் செய்வார். இதேபோல், தற்போது வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியிலும் லிட்டன் தாஸ் அதேபோல் ரன் அவுட் செய்து அசத்தினார். 


இதையடுத்து, வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸின் ரன் அவுட் ஸ்டைலை பார்த்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் மகேந்திர சிங் தோனியை கொண்டாடி வருகின்றனர். 









என்ன நடந்தது..? 


வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 சர்வதேச போட்டியில், இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, லிட்டன் தாஸ் கடைசி ஓவரின் கடைசி பந்தில் தசுன் ஹனகாவை ரன் அவுட் செய்தார். பந்து மிட் ஆன் திசையில் எல்லை கோட்டை நோக்கி சென்றது. அப்போது, அங்கிருந்த ரிஷாத் ஹூசைன் பந்தை பிடித்து நேராக விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸை நோக்கி வீசினார். அடுத்தடுத்த வேலைகளை மிகவும் நேர்த்தியாகவும், புத்திசாலித்தனமாகவும் லிட்டன் தாஸ் செய்தார். 






ஹூசைன் வீசிய பந்து அந்த நேரத்தில் ஸ்டம்பிலிருந்து வெகு தொலைவுக்கு சென்றது. அந்த நேரத்தில் லிட்டன் தாஸ் பந்தை பிடித்து ஸ்டம்பை நோக்கி நகர்ந்து அடிப்பது என்பது நேரத்தை கடந்துவிடும். அதற்கும் பேட்ஸ்மேன் கீரிஸுக்குள் வந்துவிடுவார். இதனால் நேராக பந்தை நோக்கி ஓடிய லிட்டன் தாஸ். பந்தை பிடித்து அதை திரும்பி கூட பார்க்காமல் ஸ்டம்பை நோக்கி வீசினார். பந்து சரியாக ஸ்டம்பை பதம் பார்க்க, பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரன் அவுட்டை பார்த்ததும் அனைவரும் தோனியின் நினைவு வர ஆரம்பித்தது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் தோனி இதுபோன்று பலமுறை எதிரணி வீரர்களை ரன் அவுட் செய்துள்ளார். 



போட்டி சுருக்கம்: 


முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 146 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியது.