தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச கிரிக்கெட் அணி, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது வங்கதேச அணி. அதனை அடுத்து, நேற்று நடந்து முடிந்த முதல் போட்டியில் தென்னாப்ரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றிருக்கிறது.
டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது வங்கதேச அணி. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டெம்பா பவுமா 93 ரன்கள் எடுத்து அசத்தினார். அதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, 298 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஓப்பனர் ஹசன் மட்டும் களத்தில் நின்று 137 ரன்கள் எடுக்க, மற்ற பேட்டர்கள் சொதப்பினர்.
அதனை அடுத்து தென்னாப்ரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதில், 204 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இதனால், 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, சொதப்பியது. டி20 போட்டியில் விக்கெட்டுகள் சரிவது போல இந்த இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் 19 ஓவர்களில் வெறும் 53 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. தென்னாப்ரிக்க அணியைப் பொறுத்தவரை கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளும், சைமன் ஹார்மர் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதன் மூலம், இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்ரிக்க அணி முன்னிலை பெற்றிருக்கிறது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது வங்கதேச அணி. இதற்கு முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 43 ரன்களுக்கு ஆல்-அவுட்டானதே வங்கதேச அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அதுமட்டுமின்றி, இதுவரை தென்னாப்ரிக்காவுக்கு எதிராக தென்னாப்ரிக்க மன்னில் வங்கதேச அணி விளையாடி இருக்கும் 7 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்