இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இந்த போட்டியானது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.


இந்த டெஸ்ட் போட்டிக்கு முன் கிரிக்கெட் ரசிகர்கள் சோகம் அடையும் வகையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது தரம்சாலாவில் கடும் குளிர் நிலவும் என்றும், இந்த போட்டி தொடங்கிய சில மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டியில் மழை வில்லனாகும். 


இன்றைய டெஸ்ட் போட்டியின்போது தரம்சாலாவில் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரியாக இருக்கும் என்றும், வெப்பநிலை -4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கடும் குளிரில் விளையாடுவது இரு அணி வீரர்களுக்கும் பெரும் சவாலாக இருக்கும். 


இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்டின் முதல் நாள் எப்படி இருக்கும்..?


மலைகளால் சூழப்பட்ட தரம்சாலாவின் வெப்பநிலை தற்போது மிகவும் குறைவாக உள்ளது. கடந்த வாரம் இங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. மேலும், ஆட்டத்தின் முதல் நாளான இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ‘அக்குவெதர்’ தெரிவித்துள்ளது. பகல் தொடக்கம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், போட்டி தொடங்கிய பிறகு மழை வரலாம். அதாவது, போட்டி தொடங்கி நடைபெறும்போது மதியம் 12 மணியளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மழை பெய்து முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்படுமா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 


முக்கியமான போட்டி: 


ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையின் பார்வையில், ஐந்தாவது டெஸ்ட் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய அணி அபாரமாக மீண்டு வந்தது. முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலையில் உள்ளது. தரம்சாலா டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 4-1 என கைப்பற்ற வேண்டும் என இந்திய அணி விரும்புகிறது.


இரு அணிகளின் விவரம்:


இந்திய அணி: 


ரோஹித் சர்மா (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், ரவீந்திர ஜடேஜா, சர்ஃபராஸ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரீகர் பாரத், தேவ்தத் பாடிக்கல், அக்சர் படிக்கல், முகேஷ் குமார்


இங்கிலாந்து அணி: 


பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வூட், டேனியல் லாரன்ஸ், கஸ் அட்கின்சன்