பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தற்போது சிறந்த பேட்ஸ்மேன் என வர்ணிக்கப்படுபவர் பாபர் அசாம். ஒருநாள் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான கேப்டன் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் பாபர் அசாமால் தனது பேட்டிங் பார்மை மீட்டெடுக்க முடியவில்லை. ஆஸ்தொரேலியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் செயல்திறனும் சிறப்பாக இல்லை.
என்ன ஆனது பாபர் அசாமுக்கு..?
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி, அரையிறுதி செல்லாததை தொடர்ந்து பாபர் அசாம் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். உலகக் கோப்பை போட்டி முழுவதும் பாபர் அசாம் சொல்லும்படியாக பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. இதையடுத்து, பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்டின் கேப்டன் பதவியை ஹான் மசூத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பாபர் அசாம் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடம் இருந்தது.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஐந்து இன்னிங்ஸ்களில் பாபரின் ஸ்கோர்கள் 21(54), 14(37), 1(7), 41(79), 26(40) ஆகும். பாபர் அசாம் இந்த ஐந்து இன்னிங்ஸ்களில் 20.6 சராசரியில் 103 ரன்கள் மட்டுமே எடுத்தார். சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஸ்டைலான கவர் டிரைவ்களுடன் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்த பாபர் அசாம் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் கூட இல்லை:
மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணிக்காக ஜொலிக்கும் நட்சத்திரம் என்ற பட்டத்தை பெற்றவர் பாபர் அசாம். ஆனால், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பாபர் அசாமால் டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பாபர் அசாமின் டெஸ்ட் சதங்கள்:
2016 - 10 இன்னிங்ஸ் விளையாடி 0 சதம்
2017 - 12 இன்னிங்ஸ் விளையாடி 0 சதம்
2018 - 14 இன்னிங்ஸ் விளையாடி 1 சதம்
2019 - 11 இன்னிங்ஸ் விளையாடி 3 சதங்கள்
2020 - 6 இன்னிங்ஸ் விளையாடி 1 சதம்
2021 - 13 இன்னிங்ஸ் விளையாடி 0 சதம்
2022 - 17 இன்னிங்ஸ் விளையாடி 4 சதங்கள்
2023 - 8 இன்னிங்ஸ் விளையாடி 0 சதம்
29 வயதான பாபர் அசாம் இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.13 சராசரியில் 9 சதங்களுடன் 3875 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், பாபர் அசாம் 117 ஒருநாள் போட்டிகளில் 19 சதங்களுடன் 5729 ரன்களும், 104 டி20 போட்டிகளில் 3 சதங்களுடன் 3485 ரன்களும் எடுத்துள்ளார். பாபர் ஆசாமின் பேட்டிங் சராசரி ஒருநாள் போட்டிகளில் 56.72 ஆகவும், டி20 போட்டிகளில் 41.49 ஆகவும் உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் SENA நாடுகளுக்கு எதிராக பாபர் அசாமின் சாதனை என்ன?
SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) 17 டெஸ்ட் போட்டிகளில் 35.96 சராசரியில் 1007 ரன்கள் எடுத்துள்ளார் பாபர் அசாம்.
நாடு | போட்டிகள் | ரன்கள் | சராசரி |
நியூசிலாந்து | 2 | 142 | 47.33 |
ஆஸ்திரேலியா | 8 | 381 | 25.40 |
இங்கிலாந்து | 4 | 263 | 65.75 |
தென்னாப்பிரிக்கா | 3 | 221 | 36.83 |
பாபர் அசாம் அறிமுகமான 2016 முதல் 2023 வரை ஆஸ்திரேலியாவில் அவரது சராசரியான 24.15 என்பது மோசமான பேட்டிங் பார்மை குறிக்கிறது.