உலகக் கோப்பை 2023ல் எதிர்பார்த்த அளவிற்கு விளையாட முடியாமல் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. நேற்று (நவம்பர் 11) இங்கிலாந்துக்கு எதிரான டாஸ் தோல்வியுடன் அரையிறுதியில் விளையாடுவதற்கான அதன் கடைசி நம்பிக்கை முடிந்தது. இந்த உலகக் கோப்பையில் 9 ஆட்டங்களில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று பாகிஸ்தான் அணி தற்போது தனது நாட்டிற்கு திரும்பியுள்ளது.


இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் அதன் பின்னர் அவர்களது ரயில் தடம் புரண்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தோல்வியைத் தொடங்கியபோது, ​​பாபரின் கேப்டன்சி குறித்து பல்வேறு விவாதம் தொடங்கியது. தற்போது பாகிஸ்தான் அணியின் உலகக் கோப்பை சுற்றுப்பயணம் முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் அந்த அணியின் தலைமை மாற்றம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் இருந்தும் ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது.


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொன்னது என்ன..? 


இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”பாபர் அசாம்  ஏற்கனவே தனது சக வீரர்களுடன் தனது கேப்டன்சி குறித்து பேசியிருக்கிறார். பெரும்பாலான வீரர்கள், அவரே பதவி விலக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறிய பாபர் அணியுடன் பாகிஸ்தான் திரும்பினால், அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க முடியும், ஆனால் அவரே கேப்டன் பதவியில் இருந்து விலக மாட்டார்.” என்று தெரிவித்தது. தொடர்ந்து, “ பாபருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், 'அவர் கேப்டனாக தொடர்வாரா இல்லையா என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப்பிடம் விட்டுள்ளார்” என தெரிவித்தார். 


பாபர் அசாம் தனது சக வீரர்களான ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, ஹரிஸ் ரவூப், ஷதாப் கான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருகின்றனர். கடந்த முறையும், பாபரின் கேப்டன்சி குறித்து கேள்வி எழுந்தபோது, ​​சில சக வீரர்கள் பாபருக்கு சமூக வலைதளங்களில் '#சொச்னா பீ மனா ஹை' என்று ஆதரவு தெரிவித்தனர்.


2019 இல் கேப்டனான பாபர் அசாம்: 






2019 உலகக் கோப்பைக்குப் பிறகு பாபர் அசாம் பாகிஸ்தானின் ஒருநாள் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சர்பராஸ் கானுக்கு பிறகு தலைமை பொறுப்பை ஏற்றார். இதன் பிறகு, 2021-ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியையும் பெற்றார். 2022 டி20 உலகக் கோப்பையில், இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.