இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன், இந்திய அணிக்கு யார் யார் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்ற நெருக்கடிகள் இப்போதே அதிகரித்து வருகின்றன. இந்த சிரமம் இந்திய அணிக்கு நல்லது என்றாலும், சீனியர் வீரர்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில்,  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அக்சர் படேல் அற்புதமாக பந்துவீசி, இந்திய அணியின் தேர்வுக்குழுக்கு மேலும் சிரமத்தை கொடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அக்சர் படேலுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்தநிலையில், சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக அக்சர் படேல் உருவெடுத்துள்ளார்.


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அக்சர் படேல் 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அக்சர் படேல் அனைத்து விதமான டி20 போட்டிகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இந்த சாதனை ரவீந்திர ஜடேஜாவின் பெயரில் மட்டுமே இருந்தது. ரவீந்திர ஜடேஜா டி20யில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது இந்த பட்டியலில் அக்சர் படேலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.


ஆட்டநாயகன் விருது வென்றதற்கு பிறகு பேசிய அக்சர் படேல், மிகவும் நன்றாக உணர்கிறேன். ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். நான் எப்போதும் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன். கடந்த சில வருடங்களில் நான் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை.” என்று கூறினார்.






அக்சர் படேலின் சாதனை: 


அக்சர் படேல் இதுவரை 234 போட்டிகளில் விளையாடி 2545 ரன்கள் குவித்துள்ளதோடு, 200 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் வெற்றிகரமான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா இதுவரை ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் என மொத்தம் 310 போட்டிகளில் விளையாடி 3382 ரன்களும், 216 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதனால், தற்போது டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்த இரு வீரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் தேர்வுக்குழு விரும்பினால் ஜடேஜாவுக்கே வாய்ப்பு வழங்கப்படும். இவர்களுக்கு இடையேயான போட்டியில் சிவம் துபேவின் அதிரடி பேட்டிங் மற்றும் விக்கெட் வேட்டையையும் மறந்துவிடக்கூடாது. 


டி20 போட்டியில் இந்தியாவுக்காக 50 ரன்கள் + 1 விக்கெட்:


3 முறை - யுவராஜ் சிங்
2 முறை - சிவம் துபே
2 முறை - விராட் கோலி
1 முறை - ஹர்திக் பாண்டியா
1 முறை - அக்சர் படேல்
1 முறை - வாஷிங்டன் சுந்தர்
1 முறை - திலக் வர்மா


தற்போதைய ஃபார்மைப் பார்க்கும்போது, ​​ரவீந்திர ஜடேஜாவை அக்சர் படேல் மிஞ்சி சாதனை படைக்கலாம். ஆனால் இவை அனைத்தும் அதிக போட்டிகளில் அக்சர் படேலுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நடக்கும். ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் படேலின் ஆட்டம் சிறப்பாக இருந்தால், தேர்வாளர்கள் கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அக்சர் படேலின் ஒருநாள் உலகக் கோப்பைக்காக தேர்வு செய்தபோது, காயம் காரணமாக அவரால் அணியில் இடம்பெற முடியவில்லை. அப்போது அவருக்கு மாற்றாகவே ரவிசந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.