சூப்பர் 8 சுற்று:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில் இன்று (ஜூன் 24) நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஸ்  பந்து வீச்சை தேர்வு முதலில் தேர்வு செய்தார்.


அதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார்.


அதாவது இந்த உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது முறையாக டக் அவுட் ஆகியிருக்கிறார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவுடன் பார்டனர்ஷிப் அமைத்தார். 


அரைசதம் விளாசிய ரோஹித் ஷர்மா:






விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்து இருந்தாலும் இந்திய அணியின் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா சிக்ஸர் மழையில் டாரென் ஷமி மைதானத்தை நினையவைத்தார். இதனிடையே ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார் ரிஷப் பண்ட்.


இச்சூழலில் 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட அரைசதத்தை பதிவு செய்தார் ரோஹித் ஷர்மா. அதோடு டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.


பின்னர் வந்த சூர்ய குமார் யாதவும் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். மளமளவென இந்திய அணியின் ரன்கள் உயர்ந்தது. அப்போது ரோஹித் ஷர்மா தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் விளாசி மொத்தம் 92 ரன்களை குவித்தார்.


206 ரன்கள் இலக்கு:


மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 16 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது.